திங்கள், 19 மார்ச் 2018
Selva Zug 2

குமுதினிப் படுகொலை! நீதி மறுக்கப்பட்ட ஒரு துயரத்தின் கதை!

குமுதினிப் படுகொலையானது மனித உரிமை அமைப்புக்களின் சான்றுகளில் இருந்து மறைக்கப்பட்டு, நீதி மறுக்கப்பட்டதாக, அல்லது நீதி வழங்கப்படாததாக 31 தசாப்தங்களாகிவிட்டது. . 1985ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் நாள் காலை ஏழு மணிக்கு நெடுந்தீவு மாவிலி துறைமுகத்திலிருந்து 64 பயணிகளுடன் புறப்பட்டபோது,  குமுதினிப்படகு அரை மணி நேர பயணத்தின் பின் சிறிலங்காக கடற்படையால் நடுக்கடலில் வழிமறிக்கப்பட்டது. இரு சிறிய பிளாஸ்ரிக் படகில் வந்த சிறிலங்கா கடற்படையினர் குமுதினிப் படகை நிறுத்தச்சொல்லி அதை நிறுத்தியபின்னர் 6 கடற்படையினர் முக்கோணக் கூர்க்கத்திகள், கண்டங் கோடாரிகள், இரும்புக்கம்பிகள் சகிதம் குமுதினிப்படகில் ஏறினர்.
படகின் பின்புறம் இருந்த பயணிகளை படகின் முன்பக்கம் செல்லுமாறும் மிரட்டினர் அவர்கள் அனைவரும் சென்றுவிட்டனர். படகின் பின்புறம் இரு புற இருக்கைகளுக்கு நடுவே இயந்திரத்திலிருந்து பின்புறம் புறப்புளருக்குச் செல்லும் ஆடுதண்டுப்பகுதி மூடப்பட்டிருந்த பலகைகளை படையினர் களற்றி (இருக்கைகளிலிருந்து 4 அடி ஆழம் உள்ளதாக இது இருந்தது) அதன் பின் படகுப் பயணிகள் ஒவ்வொருவராக உள்ளே அழைக்கப்பட்டனர். குமுதினி இருபக்க வாசல்களிலும் உள்ளும், வெளியும் கடற்படையினர் இருந்தனர். ஒவ்வொருவராக வந்த பயணிகளை அழைத்து கத்தியால் குத்தியும், கண்டம் கோடரிகளால் வெட்டியும், இரும்புக் கம்பிகளால் தாக்கியும் அந்த படகின் நடுப்பள்ளத்தில் போடப்பட்டனர்.
கொல்லப்பட்டவர் போக குற்றுயிராய்ப்போனவர்கள் குரல் எழுப்ப முடியாது செத்தவர்கள்போல் கிடந்தனர். இச்சம்பவத்தில்,தாக்குதல் நடக்குதென குரல் கொடுக்க முனைந்தவர்கள் அதிகாரிகளால் தாக்கப்பட்டு இறந்தார்கள். உள்ளே பள்ளமாக இருந்த பகுதியில் மக்கள் போடப்பட்டதால் முன்புறமிருந்து செல்லும் பயணிகளுக்கு ஒவ்வொருவராக முன்பு சென்றவர்களுக்கு என்ன நடந்தது என்பது தெரியாதிருந்தது. இதனையறிந்தஒருவர் கடலில் குதித்துக் கொண்டார். அதன் பின் படகில் இருந்த சிலரும் கடலில் குதிக்கத் தொடங்கினர். இதனைக் கண்ட படையினர் துப்பாக்கிகளால் அவர்களைச் சுட்டுக் கொன்றனர். ஏழுமாதக் குழந்தை முதல் வயோதிபர்கள் வரை ஈவிரக்கமற்றமுறையில் படுகொலை செய்யப்பட்டனர். இச்சம்பவத்தில் இறந்தவர் போல கிடந்த சிலர் உயிர்தப்பிக் கொண்டார்கள்.
ஒன்றரை மணி நேரமாக குமுதினியைக் குதறியவர்கள் நடுக்கடலில் கைவிட்டு அங்கிருந்து மறைந்தனர். முன்பெல்லாம் தீவின் மக்களை சுமந்த குமுதினி அன்று அவர்களின் குருதியையும் சுமந்தது. குமுதினியில் இருந்து வடிந்த குருதியினால் கடல் அன்னை சிவப்பாகிப் போனாள்.
உச்சத்தில் நின்றிருந்த சூரியனும் நயினையில் வீற்றிருந்த புத்தபகவானும் நடுக்கடலில் நிகழ்ந்த கொடுரத்தினை மனதினுள் புதைத்துக் கொண்டு மௌனமாகினர்.
எப்போதும் காலையிலேயே குறிகட்டுவான் இறங்கு துறையினை வந்தடையும் குமுதினி அன்று வரவில்லை. மதியத்தில் பிறிதொரு படகின் துணையுடன் வந்தடைந்த போதும் அவசர அவசரமாக வெளியேறும் மக்கள் கூட்டத்தினை அன்று காணவில்லை. அவர்கள் சடலங்களாக மட்டுமே வந்து இருந்தனர். இப்படுகொலையின் பின் காயம் அடைந்தவர்கள் புங்குடுதீவு வைத்தியசாலைக்கும், யாழ்.போதனா வைத்தியசாலைக்கும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் கொல்லப்பட்ட விடயத்தை மருத்துவமனையால் சிறிலங்கா காவல்துறையிடம் முறையிட்டும் எதுவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. பதிலாக சில நாட்களில் தப்பியவர்களை மருத்துவமனைக்கு வந்த சிறிலங்கா கடற்படையினர் தேடத்தொடங்கினர். நோயாளிகள் உடனடியாக மருத்துவமனையிலிருந்து விடுதிகளுக்கு இடம் மாற்றப்பட்டு மறைக்கப்பட்டனர். உயிர் தப்பிய படகுப் பயணிகளை படையினர் புங்குடுதீவு மருத்துவமனையில் தேடிச்சென்ற போது சிலர் மறைக்கப்பட்டு தலை மறைவாகியே சிசிச்சை பெற்றனர். சிலரைத் தவிர ஏனையோர் வெளிநாடுகளுக்குத்தப்பிச் சென்றுவிட்டனர். அரசப் படைகள் படகுப்பயணிகள் தப்பி விடக்கூடாது என்பதற்காக அவர்களைத்தேடித்திரிந்தனர். எதுவிதவிசாரணைகளும் மேற்கொள்ளப்படாது இக் கடற்படுகொலை மறுக்கப்பட்டு மறைக்கப்பட்டுள்ளது. ஆனால் சாட்சிகளை தேடியழிக்கச் சிறிலங்காக்கடற்படையினர் தீவிர அக்கறைகாட்டி வந்தனர். விசாரணைகளற்று மறைக்கப்பட்ட குமுதினி கடற்படுகொலை வெளிச்சத்துக்கு கொண்டு வரப்படவேண்டும். சிங்கள தேசக் காடையர்களால் நிகழ்த்தி மறைக்கப்பட்ட கொடூரங்கள் அம்பலப்படுத்தப்பட வேண்டும்.உலக நாடுகளின் மனச்சாட்சிகளை தட்டி உலுப்ப வேண்டும். இதற்கு இதில் உயிர் தப்பியவர்கள் மனித உரிமைச் சபைக்குச் சாட்சியமளித்து போராடினார்கள். எதுவுமே நடக்கவில்லை.
குமுதினி மௌனமாகிப் போனதால் தனிமையான தொலை தீவில் வாழ்ந்த மக்களுக்கு தமது உறவுகளின் மரணங்கள் கூட கிட்டாது போனது.
கசப்பான அந்த அனுபவப் பதிவில் உயிர்பிழைத்தோர் நிகழ்ந்த கொடுரங்களை பக்கம் பக்கமாக அறிக்கைகளாக உலகுக்கு வெளிப்படுத்தினர்.ஆனாலும் அடைந்த பலன் ஏதும் அல்ல.
உலகமும் கொடூரங்களாக நோக்காது வெறும் அறிக்கைகளாகவே நோக்கியது. துயர வடுக்களைச் சுமந்த மக்களுக்கு நிகழ்ந்த மற்றும் ஒரு அவலமாக அமைந்தது. தனித்துவிடப்பட்ட நெடுந்தீவு மக்களிற்கு மறுநாள் அதிகாலை அகில இந்திய வானொலியின் மாநிலசெய்தி மூலமே முதல்நாள் பயணித்தவர்களுக்கு நேர்ந்ததை அறிய முடிந்தது. துயர அலை எழுந்து ஒவ்வொரு மக்களின் ஓல குரலுடன் ஊரை கவ்விய அந்த நாளை எப்படி எம்மால் மறக்க முடியும்.
கோரமான கொடுமைகள் இழைக்கப்பட்டு துடிக்க துடிக்க கொல்லப்பட்ட எம் உறவுகளை நெஞ்சில் நிறுத்தி அஞ்சலி செலுத்துவோம்,
-கயல்விழி வரதன்-
முகப்பு
Selva Zug 2