நீர்கொழும்பில் வாடகைக்கு பெற்ற காரை யாழில் பல இலட்ச ரூபாய்களுக்கு அடகு வைத்த கில்லாடி


நீர்கொழும்பில் வாடகைக்கு பெற்ற காரை யாழ்ப்பாணத்தில் நபரொருவரிடம் அடகு வைத்து 80 இலட்ச ரூபாய் பணத்தினை பெற்றுக்கொண்டு தலைமறைவானவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

யாழ்ப்பாண நகரை அண்மித்த பகுதியில் அநாதரவாக நின்ற சொகுசு கார் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர். 

அதேவேளை நீர்கொழும்பு பொலிஸார் குறித்த காரினை காணவில்லை என விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் கார் யாழ்ப்பாண பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளமையை அறிந்து , யாழ்ப்பாணம் வருகை தந்து காரினை மீட்டு சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

நீர்கொழும்பில் வாகனங்களை வாடகைக்கு விடும் நிறுவனம் ஒன்றில் கார் ஒன்றினை வாடகைக்கு பெற்ற நபர் , சில நாட்கள் காரினை செலுத்திய பின்னர் , அதன் தடம் அறி (GPS) கருவியை செயலிழக்க வைத்துள்ளார். 

அதனை அடுத்து , வாகனம் வாடகைக்கு கொடுத்தவர் நீர்கொழும்பு பொலிசாரிடம் முறைப்பாடு அளித்துள்ளார். அதன் பிரகாரம் நீர்கொழும்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்துள்ளனர். 

அதே நேரம் , காரினை வாடகைக்கு பெற்றவர், யாழ்ப்பாணத்தில் ஒரு நபரிடம் காரினை அடமானமாக வைத்து 80 இலட்ச ரூபாய் பணத்தினை பெற்று சென்றுள்ளார்.

இந்நிலையில், அடமானம் வைத்த கார் , நீர்கொழும்பில் வாடகைக்கு பெற்ற கார் எனவும் , கார் தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதனையும் அறிந்த , காரினை அடமானமாக வைத்து பணம் கொடுத்த நபர் , பொலிஸ் விசாரணைகளுக்கு பயந்து காரினை வீதியில் அநாதரவாக விட்டு தப்பி சென்றுள்ளார். 

காரினை அடமானம் வைத்து பணத்தினை பெற்று சென்ற நபரை கைது செய்வதற்கு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments