புதிய பயங்கரவாத தடைச்சட்ட முன்மொழிவுக்கு எதிரான மாபெரும் கையெழுத்து போராட்டம் திருமலையில் ஆரம்பம்!


பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் புதிய பயங்கரவாத தடைச்சட்ட முன்மொழிவு ஆகியவற்றை முற்றாக நிராகரித்து எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மாபெரும் கையெழுத்துப் போரட்டம் திருகோணமலையில் இன்றைய தினம் சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலையில் இடம்பெற்ற ஈழத் தமிழர் உரிமைகள் பெருமன்று (EDRA) அங்குராற்பண நிகழ்வில் இக்கையெழுத்துப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

இதன்போது திருகோணமலை மறை மாவட்ட ஆயர் நோயல் இமானுவேல், சிவகுரு ஆதீன குரு முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகள், மட்டக்களப்பு அமெரிக்கன் மிசன் அருட்பணி லுக் ஜோன் ஆகியோர் முதல் கையொப்பங்களை இட்டபின்னர் நிகழ்வில் பங்கேற்றவர்களும் கையொப்பம் இட்டு வலுச்சேர்த்திருந்தனர்.

உங்கள் கையெழுத்து உங்கள் உரிமையைக் காக்கும்..! என்ற தொனிப்பொருளில், பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட முன்மொழிவை கைவிடக் கோரியும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கக் கோரியும் ஒரு இலட்சம் கையெழுத்து பெறும் இலக்குடன் வடக்கு கிழக்கு தழுவிய மாபெரும் கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் சார்பில், வடக்கு கிழக்கு குடிசார் அமைப்புகளின் கூட்டிணைவில் முன்னெடுக்கப்படும் மாபெரும் கையெழுத்துப் போராட்டமானது வரும் 25 ஆம் திகதி வரை முன்னெடுப்பட்டு நீதி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்படுவதுடன் அதன் பிரதிகள் ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகம், ஐ.நா. மனித உரிமைகள் பேரவை ஆணையாளர், ஐரோப்பிய ஒன்றியம், சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட அனைத்துலக இராஜதந்திரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments