முரசறைந்த திருமலைப் பிரகடனம்!




சர்வதேச மத்தியஸ்தத்துடன் அரசியலமைப்புக்கு முற்பட்ட சமூக ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கவேண்டும் என்று முரசறைந்துள்ளது 2026 திருமலைப் பிரகடன முன்வரைவு

உள்நாட்டில் வைத்து அரசியலமைப்புத் தயாரிக்கும் பயிற்சிகளில் தமிழர் தரப்பு மீண்டும் மீண்டும் காலத்தை விரயமாக்கக் கூடாது. 

பதிலாக, சர்வதேச மத்தியஸ்தத்துடனும் உத்தரவாதத்துடன் ஈழத்தமிழரின் வெளியக சுயநிர்ணய உரிமையின் பாற்பட்ட விட்டுக்கொடுப்புகள் எதுவும் இன்றிய உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளை நடாத்தி, இலங்கைத் தீவிலுள்ள வெ;வேறுபட்ட தேசிய இனங்களுக்கும் மக்கள்களுக்கும் இடையே ஒரு சமூக ஒப்பந்தச் சமன்பாட்டை எட்ட முடியுமா என்பதே முதலில் இடம்பெறவேண்டும். 

விளைவாக, அரசியலமைப்புக்கு முற்பட்ட சமூக ஒப்பந்தம் ஏற்படுமானால், அதன்பின்னரே தென்னிலங்கைத் தரப்புகளிடம் அரசியலமைப்புக்கான வரைவை முன்வைக்குமாறு கோரலாம், பயிற்சிகளிலும் ஈடுபடலாம். அதுவே பலனளிக்கும். 

மாறாக, மீண்டும் மீண்டும் அரசியலமைப்பு மாதிரிகளை எழுத முற்படுவது வெளியக சர்வதேச நீதியை நீர்த்துப் போகச் செய்து உள்ளகப் பொறிமுறை என்று தென்னிலங்கைச் சக்திகள் தேசிய இனப் பிரச்சனைக்கான அரசியல் தீர்வை இழுத்தடிக்க இடமளிப்பதாகவே போய்முடியும் என்று திருகோணமலை ஆயர், தென்கயிலை ஆதினம், வேலன் சுவாமிகள் உள்ளடங்கலான பேராளர்களின் பங்கேற்போடு உருவாக்கப்பட்டுள்ள புதிய குடிசார் சமூகமான ஈழத்தமிழர் உரிமைகள் பெருமன்று விரிவான 12 பக்கப் பிரகடன வரைவு ஊடாக பெப்ரவரி 14 ஆம் திகதி சனிக்கிழமை முரசறைந்துள்ளது.  

இராஜதந்திர மொழியிலும் சர்வதேசச்ட்ட மொழியிலும் ஆங்கிலத்தில் பல நிபுணர்களின் ஆலோசனையோடு தயாரிக்கப்பட்டுள்ள 2026 திருகோணமலைப் பிரகடனம் சனிக்கிழமையன்று வெளியிடப்பட்டுள்ளது. 

வெளிப்படைத் தன்மைக்கும் அனைவரையும் உள்ளடக்கும் தன்மைக்குமாக குறித்த வரைவு பொதுவெளியில் முன்வைக்கப்பட்டுள்ளதேடு எதிர்வரும் மார்ச் மாதம் 15ம் திகதி வரை ஈழத்தமிழர் அனைவரும் தமது கருத்துப் பகிர்வோடு அதை மேலும் மெருகூட்டும் வகையில் வெளிப்படைத் தன்மையோடும் உள்ளடக்கும் தன்மையோடும் திருகோணமலைப் பிரகடனம் முன்வைக்கப்பட்டுள்ளதாக அது குறித்து விளக்கமளித்த அரசியல் சமூக செயற்பாட்டாளரும் பன்னாட்டு நீதி குறித்த நூலாசிரியருமான சிறீஞானேஸ்வரன் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த வரைவு இணையத் தளத்தில் ஆங்கில மொழியில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் தோராயமான தமிழ் மொழி பெயர்ப்பு 20 பக்கங்களில் முன்வைக்கப்பட்டுள்ளது. 

இந்த முயற்சி ஈழத்தமிழர்களால் சுயாதீனமாக, எந்தவித வெளிநாட்டுச் சக்திகளது நிதியூட்டமோ, தன்னார்வ நிறுவனங்களின் தாக்கமோ இன்றி முன்னெடுக்கப்படுவதாகவும் குறித்த வேலைத்திட்டம் கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் சர்வதேச நீதிக்கான வழிவரைபடம் குறித்த நிலைப்பாடு தயாரிக்கப்பட்டதோடு ஆரம்பிக்கப்பட்டதாகவும் சிறீஞானேஸ்வரன் தெரிவித்தார். 

ஆறாம் சட்டத்திருத்தத்தை நீக்கவேண்டும் என்ற கோரிக்கையும் ஓகஸ்ட் மாத நிலைப்பாட்டில் வெளியாகியிருந்தது. a

No comments