புதன், 24 ஜனவரி 2018
Selva Zug 2

ஓராண்டு மோகத்தால் பதவியிழந்த சந்திரிகா, மகிந்த பாதையில் மைத்திரி – பனங்காட்டான்

Maithri-Mahinda-Chandrikaஓராண்டை அதிகரிக்க இரு தடவை பதவியேற்ற சந்திரிகாவால் அதை எட்ட முடியவில்லை. ஓராண்டு முற்கூட்டித் தேர்தல் நடத்தியும், மகிந்தவால் வெற்றி பெற முடியவில்லை. 18ம் திருத்தத் துணையுடன் ஓராண்டை அதிகரிக்க மைத்திரி இப்போது முனைகிறார். எல்லாமே சக்கடத்தாரின் முறிந்த கதிரைக் கதைதான்.

இலங்கையில் உள்;ராட்சிச் சபைத்தேர்தல் பரப்புரை சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.

யார் வந்தாலென்ன, தோற்றாலென்ன இத்தேர்தல் முடிவு இலங்கையில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவராதென்பது அனைவருக்கும் தெரியும்.

இரண்டாண்டுகளுக்குப் பின்னரான பொதுத் தேர்தலுக்கு, அடிமட்டத்தில் அத்திவாரம் போடும் இலக்கில் சகல கட்சிகளும் இத்தேர்தலைப் பயன்படுத்தி வருகின்றன.

ஆனால், தென்னிலங்கையில் ஆட்சி பீடத்தில் ஏற்பட்டுவரும் நெருக்கடி, சிலவேளை பெப்ரவரி 10ம் திகதிக்குப் பின்னர் ஆட்டங்களையும் பிளவுகளையும் ஏற்படுத்தக்கூடிய வாய்ப்புண்டு.

மைத்திரி – ரணில் ஆகிய இருவருக்குமிடையிலான பனிப்போரும், மகிந்தவுக்கும், மைத்திரிக்குமிடையிலான முரண்பாடுகளும், பொய்யும் ஏமாற்றுகளும் கலந்த பரப்புரைகளும், விசாரணைக் குழுக்களின் அறிக்கைகளும் புதியதொரு அரசியல் கலாசாரத்தை உருவாக்கியுள்ளது.

இவற்றுள் முதன்மையானதாக இப்போது மாற்றம் பெற்றுள்ளது, ஜனாதிபதி ஆட்சிக் கதிரையை எவ்வாறு ஓராண்டுக்கு அதிகரிக்கலாமென்பது.

இதுபற்றிப் பூரணமாக அறிவதானால் 1977ம் ஆண்டுப் பொதுத்தேர்தலுக்கு நாங்கள் செல்ல வேண்டும்.

இலங்கையில் மக்களால் தெரிவாகும் ஜனாதிபதி முறைமையை முதன்முதலாக அறிமுகம் செய்தவர் ஜே.ஆர்.ஜெயவர்த்தன.

1948ல் டி.எஸ்.சேனநாயக்க தலைமையிலான முதலாவது அரசாங்கத்திலிருந்து, 1965 – 70 வரையான டட்லி சேனநாயக்க தலைமையிலான அரசாங்கம்வரை சகல ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சியிலும், மந்திரியாகவிருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன தமது 71வது வயதிலேயே (1977) பிரதமர் பதவிக்கு வர முடிந்தது.

கிழட்டு நரி என்ற பட்டப்பெயர் கொண்ட இவரே, இப்பட்டத்துக்குப் பொருத்தமாக கிழட்டு வயதில் ஜனாதிபதியாகத் தெரிவான முதலாவது அரசியல்வாதியுமாவார்.

1977ம் ஆண்டுத்தேர்தலில் ஆறில் ஐந்து பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றிய இவர் முதலாவதாகச் செய்த வேலை, 1972ல் சிறிமாவோ பண்டாரநாயக்கா அமல்படுத்திய அரசியல் யாப்பில் திருத்தம் செய்து தம்மைத்தாமே ஜனாதிபதியாக மாற்றிக் கொண்டது. இந்த முதலாவது ஜனாதிபதி பதவியேற்பு 1978 பெப்ரவரி 4ம் திகதி கொழும்பு காலிமுகத் திடலில் இடம்பெற்றது.

அதேயாண்டு செப்ரம்பர் 7ம் திகதி இலங்கைக்கான புதிய அரசியல் யாப்பை உருவாக்கி, சட்டப்படி நடைமுறைப்படுத்தினார்.

1982ல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் இலகுவாக வெற்றி பெறுவதற்காக, தமக்குப் போட்டியாக அமையக்கூடியவரான சிறிலங்கா சுதந்திரக் கட்சித் தலைவி சிறிமாவோ பண்டாரநாயக்காவின் குடியுரிமையை ரத்துச் செய்துவிட்டு, வெற்றிக்கனியைத் தமதாக்கினார்.

இரண்டாவது ஜனாதிபதிப் பதவிக்காலம் 1989 ஜனவரியில் முடிவடையவிருந்த வேளையில், அரசியல் யாப்பை மாற்றி மூன்றாவது தடவையாகவும் போட்டியிடும் ஆசை இவருக்கு ஏற்பட்டது.

இதே அரசாங்கத்தில் முக்கிய அமைச்சர்களாகவிருந்த லலித் அத்துலத்முதலி, காமினி திசநாயக்க ஆகிய இருவரும் ஜே.ஆரின் பதவி நீடிப்பு ஆசைக்குத் தூபமிடத் தொடங்கினர்.

எனது கணவர் கொல்லப்படுவதைப் பார்க்க ஆசைப்படுகிறீர்களா? என்று ஜே.ஆரின் மனைவி இரு அமைச்சரிகளிடமும் கேட்டதோடு, அந்த எண்ணம் முடிவுற்றது.

ஜே.ஆர்.ஜெயவர்த்தன மூன்றாவது தடவையாகவும் போட்டியிடுவதற்கு ஏதுவாக அரசியல் யாப்பை மாற்ற முயன்றால், அப்போது பிரதமராகவிருந்த பிரேமதாசவினால் அவரது உயிருக்கு ஆபத்து வரலாமென்ற கருத்து பலரிடமும் இருந்ததை ஜே.ஆரின் மனைவியின் கூற்று நிரூபித்துக் காட்டியது.

1989 ஜனவரியில் ஜனாதிபதியாகத் தெரிவான பிரேமதாச, 1993 மே முதலாம் திகதி கொழும்பில் இடம்பெற்ற மே தின ஊர்வலக் குண்டுவெடிப்பில் காலமானார்.

இவரின் கீழ் பிரதமராகவிருந்த டிங்கிரி பண்டா விஜேதுங்க, எஞ்சிய ஒன்றரை வருடங்களுக்கும் ஜனாதிபதிப் பதவியை வகித்தார்.

1994 நவம்பரில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் சந்திரிகா குமாரதுங்க அமோக வெற்றி பெற்று இலங்கையின் முதலாவது பெண் ஜனாதிபதியானார்.

1999 டிசம்பரில் தமது பதவிக்காலத்தை மேலும் ஓராண்டால் நீடிக்க, முற்கூட்டியே ஜனாதிபதித் தேர்தல் நடத்தி வெற்றி பெற்றார். இங்குதான் இவருக்கான பிரச்சனை ஆரம்பமானது.

இத்தேர்தலில் வெற்றி பெற்ற மறுநாளே பிரதம நீதியரசர் சரத் சில்வா முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து பதவியேற்றார்.

இப்பதவியேற்பின் ஓராண்டு முடிவில், மீண்டும் ஒரு தடவை அதே பிரதம நீதியரசர் முன்னிலையில் ஜனாதிபதியாகப் பதவியேற்றார்.

இரண்டாவது பதவியேற்பை தமது அடுத்த ஆறாண்டுகளுக்கான சட்டபூர்வமாகக் காட்டி, அடுத்த ஜனாதிபதித் தேர்தலை 2006ல் நடத்த இவர் முனைந்தார். ஆனால், இரண்டு பதவியேற்புகளையும் நிகழ்த்திய பிரதம நீதியரசர் சரத் சில்வா, இரண்டாவது பதவியேற்பை ஏற்றுக் கொள்ளாது 2005ல் ஜனாதிபதித் தேர்தல் நடத்துமாறு தீர்ப்பு வழங்கினார்.

குட்டையைக் குழப்பி மீன் பிடிக்க முனைந்த இவர் அதே குட்டைக்குள் சிக்கி, தமது பதவிக்காலத்தின் ஒரு வருடத்தை இழந்து 2005ல் வீடு சென்றார்.

2005 நவம்பர் தேர்தலில் ஜனாதிபதியாகத் தெரிவான மகிந்த ராஜபக்ச, 2010ல் நடைபெற்ற இரண்டாவது தேர்தலிலும் வெற்றி பெற்றார்.

பதவி மோகம் காரணமாக அரசியல் யாப்பில் இவர் 18வது திருத்தத்தைக் கொண்டுவந்து நிறைவேற்றினார்.

ஒருவர் இரு தடவை மட்டுமே ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியுமென்பதை மாற்றி, மூன்றாவது தடவையாகவும் போட்டியிடுவதற்கு இந்தச் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது.

இதன்படி 2015 தேர்தலில் (ஒரு வருடம் முன்னராகவே) மகிந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட, அவரது சகபாடியாக பத்து வருடங்கள் அமைச்சராகவிருந்த மைத்திரிபால சிறிசேனவை, சந்திரிக குமாரதுங்கவும் ரணில் விக்கிரமசிங்கவும் இணைந்து இழுத்துவந்து களத்தில் போட்டிக்கு நிறுத்தினர்.

மகிந்தவை வீட்டுக்கு அனுப்ப சந்தர்ப்பம் பார்த்திருந்த தமிழ் மக்கள், தங்கள் வாக்குகளை மைத்திரிக்கு அள்ளிப்போட்டு அவரை ஜனாதிபதியாக்கினர்.

சந்திரிகாவுக்கு நேர்ந்த கதியே மகிந்தவுக்கும் ஏற்பட்டது எதிர்பாராதது.

தாம் ஆட்சிக்கு வந்தால் ஜனாதிபதி ஆட்சி முறையை மாற்றுவதுடன் மூன்றாவது தடவையாகவும் ஒருவர் போட்டியிடுவதை நீக்கும் சட்டத்தைக் கொண்டுவரப்போவதாகவும் 2015 தேர்தலில் மைத்திரி தெரிவித்தார்.

சொன்னவாறு 19வது திருத்தத்தைக் கொண்டு வந்து 18ம் திருத்தத்தை இல்லாது செய்தார்.

ஆனால், இன்றுவரை ஜனாதிபதி ஆட்சி முறையில் மாற்றம் கொண்டுவரப்படவில்லை. புதிய அரசியல் யாப்பிலும் அதற்கான சாத்தியம் காணப்படவில்லை.

இந்தப் பின்னணியில், புதிய வெடிகுண்டொன்றை மைத்திரி மைதானத்தில் எறிந்துள்ளார்.

2015 ஜனவரி ஜனாதிபதித் தேர்தலில் பதினெட்டாவது திருத்தமே நடைமுறையில் இருந்ததால், தமது பதவிக்காலம் ஆறாண்டுகளுக்குரியது என்று கூறி அது தொடர்பாக உயர்நீதிமன்ற அபிப்பிராயத்தை மைத்திரி கோரியுள்ளார்.

இதனை எழுதும்வேளையில் ஐந்து உயர் நீதிமன்ற நீதியரசர்களைக் கொண்ட குழு இதனைப் பரிசீலித்து வருகிறது.

சட்டமாஅதிபரின் வாதம் மைத்திரிக்குச் சார்புடையதாகவுள்ளது. இதனை உயர்நீதிமன்றம் ஏற்குமாயின், மைத்திரிக்கும் சந்திரிகாவுக்கும் மகிந்தாவுக்கும் இடையில் வேற்றுமையைக் காண முடியாது.

இந்தக் கதிரைப் பைத்தியம் அதில் ஏறுபவர்களுக்கு எப்போதுமே வந்துவிடும் போலும்.

இந்த ஓராண்டு நீடிப்பு ஆசையினால்தான் முன்னவர்கள் இருவரும் தங்கள் பதவிக்காலத்தில் ஒவ்வோராண்டை இழந்தனர் என்பதை, மரமண்டைகளால் உணர முடியவில்லை.

மைத்திரியின் ஆட்சி ஓராண்டுக்கு அதிகரிக்குமென்றால், அதே சட்டத்தின் அடிப்படையில் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் சந்திரிகாவும் தாமும் போட்டியிடத் தகுதி பெற்றுள்ளனர் என்று மகிந்த அறிவித்திருப்பது இன்னொரு வெடிகுண்டு.

மறுபுறத்தில் இதே ஜனாதிபதிக் கதிரைக்காக கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக வாடியிருக்கும் கொக்கு, தமது தற்போதைய பிரதமர் பதவியைத் தக்கவைக்க தள்ளாடுவதைக் காணமுடிகிறது.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் அரசியல் சட்டம் மாறி மைத்திரி கேட்கவில்லையானால், அந்தப் பதவி தமக்கேயென வழிமேல் விழி வைத்து நிற்கும் ரணில் விக்கிரமசிங்க, கிழட்டு நரி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் மருமகன் முறையானவர். மூளை உழைப்பில் இவரும் ஒரு நரிதான்.

மெதுமெதுவாக ரணிலை ஓரங்கட்ட மைத்திரி காய்களை நகர்த்துகிறார்.

பிணைமுறி மோசடியில் ரணிலின் பெயரும் இருப்பதாக எதிரணிகள் சுட்டி நிற்கின்றன.

ரணிலின் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களை வேவு பார்க்க, தமது கையாட்களை ராஜாங்க அமைச்சர்களாக மைத்திரி நியமித்து வருகிறார்.

புதிய பிரதமராக ரணிலின் கட்சியைச் சேர்ந்த சஜித் பிரேமதாசாவா, அகில காரியவாசமா என்ற கேள்விகளை கொழும்பு ஊடகங்கள் எழுப்பி வருகின்றன.

பெப்ரவரி 10ம் திகதி உள்;ராட்சித் தேர்தல் முடிந்தவுடன் கொழும்பு அரசபீடத்தில் பெரும் பிளவு ஏற்படுமென பலரும் கூறிவருகின்றனர்.

புதிய அரசியல் யாப்பை நம்பிக்கையுடன் நம்பியிருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ரணிலுடன் போகுமா? மைத்திரி பக்கம் சாயுமா?

வேதாளம் மீண்டும் மீண்டும் மரத்தில் ஏறும் கதைதான்!

முகப்பு
Selva Zug 2