இஸ்ரேலுக்கு எதிரான போராட்டம்: தமிழ் மாணவி கைது!!


அமெரிக்காவின் புகழ்பெற்ற பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில், இஸ்ரேலுக்கு எதிராகவும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் போராட்டத்தில் ஈடுபட்டதாக இந்திய வம்சாவளி மாணவி அச்சிந்தியா சிவலிங்கம் மற்றும் ஹசன் சையத் என்ற மாணவர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பல்கலைக்கழக விதிகளை மீறி, நேற்று வியாழக்கிழமை காலை பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டக்காரர்கள் கூடாரங்கள் அமைத்தனர். அதில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட தயாராகினர். இதையடுத்து அச்சிந்தியா சிவலிங்கம் மற்றும் ஹசன் சையத் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். மறு உத்தரவு வரும்வரை இருவரும் பல்கலைக்கழக வளாகத்தில் நுழைய தடை விதிக்கப்பட்டது. 

அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பல்கலைக்கழக செய்தித் தொடர்பாளர் ஜெனிபர் மோரில் தெரிவித்துள்ளார்.

இரண்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டபின்னரும் ஆர்ப்பாட்டம் தொடர்ந்தது. எனினும், மற்ற போராட்டக்காரர்கள் தாமாகவே முன்வந்து தங்களுடைய கூடாரம் அமைக்கும் பொருட்களை எடுத்துச் சென்றனர். பிரின்ஸ்டன் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூக அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் வெளியாட்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

கைது செய்யப்பட்ட மாணவி அச்சிந்தியா சிவலிங்கம் தமிழகத்தில் பிறந்தவர் ஆவார். அவர் சர்வதேச வளர்ச்சியில் பொது விவகாரங்கள் பிரிவில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வந்தார். சையத் பிஎச்.டி. படித்து வந்தார்.

அமெரிக்காவில் நடைபெறும் இந்த போராட்டங்களுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கண்டனம் தெரிவித்துள்ளார். இஸ்ரேலியப் படைகளின் மனித குலத்திற்கு எதிரான தாக்குதல்களை நிறுத்த வலியுறுத்துகின்றனர். இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கும் ஆயுதங்கள் பாலஸ்தீனிய மக்களைக் கொலை செய்ய பயன்படுகிறது என அவர்கள் வாதிடுகின்றனர். 

No comments