யாருக்கும் ஆதரவல்ல:மல்கம் ரஞ்சித்!
கோத்தபாய ராஜபக்சவை வெல்ல வைக்க பாடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு குறிப்பிட்ட கட்சிக்கும் ஆதரவளிக்குமாறு பொதுமக்களை கோரும் வகையில் தனது கருத்துக்களை ஒருபோதும் வெளிப்படுத்தவில்லை என்று தற்போது தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான மூன்று நாள் நாடாளுமன்ற விவாதத்தின் போது, சில அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பேராயர் மல்கம் ரஞ்சித் சில கட்சிகளுக்கு ஆதரவாக செயற்படுவதாக வெளிப்படுத்திய குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள பேராயர் செய்திக்குறிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு குறிப்பிட்ட கட்சிக்கும் ஆதரவளிக்குமாறு பொதுமக்களை ஊக்குவிக்கும் வகையில் தனது கருத்துக்களை ஒருபோதும் வெளிப்படுத்தவில்லை என தெரிவித்துள்ள அவர் இதுபோன்ற அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறுவதை தவிர்க்குமாறு வலியுறுத்தியுள்ளார்..
பிரதான எதிர்க்கட்சியான ஜக்கிய மக்கள் மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகிய இரண்டும் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் குறித்து வருங்கால வேலைத்திட்டங்களை சமர்ப்பித்துள்ளதாகவும் ஏனைய அரசியல் கட்சிகளும் தமது வேலைத்திட்டங்களை சமர்ப்பிக்க வாய்ப்பு உள்ளதாகவும் பேராயர் குறிப்பிட்டுள்ளார்.
எந்தவொரு கட்சிக்கும் வாக்களிக்குமாறு பொதுமக்களை தாம் கோரவில்லை என்றும், ஆனால், குடிமக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் மற்றும் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்டும் பொறுப்பை புறக்கணிக்கும் எவருக்கும் வாக்களிக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
வெளிப்படையான விசாரணையின் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று தாம் எப்போதும் கோரி வருவதாகக் கூறிய அவர், சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கும் திட்டத்தை முன்வைக்கும் எந்தக் கட்சிக்கும் வாக்களிக்க மக்களை ஊக்குவிப்பதாகவும் கூறியுள்ளார்..

Post a Comment