ஞாயிறு, 21 ஜனவரி 2018
Selva Zug 2

புதிய அரசியல் கலாசாரத்துக்காக பதவி துறப்பதும் துறக்க மறுப்பதும்! பனங்காட்டான்

ranil and raviதமிழரசுக் கட்சியின் முக்கியத்தரும் புதிய பல நெருக்கடிகளின் பிதாமகருமான வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் எவ்வாறு தொடர்ந்து இப்பதவி வகிக்கிறார்? தமிழரசு கட்சியினர் எந்தப் பதவியையும் ஏற்பதில்லையென்ற முடிவில் இவர் விதிவிலக்கா?

நல்லாட்சி அரசாங்கம் உருவாகி இரண்டு வருடங்கள் முடிவதற்குள் ஒரு பெரியதலை உருட்டப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசிய கட்சியின் உபதலைவரான ரவி கருணநாயக்காவே அமைச்சர் பதவியிலிருந்து வெளியேறிய அந்தப் பெரியதலை.

நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டபோது அதன் முதலாவது நிதி அமைச்சராக நியமிக்கப்பட்ட இவர், சில மாதங்களுக்கு முன்னர் அப்பதவியிலிருந்து அகற்றப்பட்டு வெளிவிவகார அமைச்சராக மாற்றப்பட்டார்.

இவர் இப்போது ஏன் பதவி விலகினார் என்பதை விளக்குவதற்கு முன்னர், இவரது பேரனாரான (தாயாரின் தந்தை) முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் சிறில் திசநாயக்காவை சற்று நினைவுபடுத்த வேண்டியது அவசியம்.

1962 ஜனவரி மாதம் 27ம் திகதி, அப்போதைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்காவையும், அவரது அமைச்சர்களையும் கைது செய்து ஆட்சியைக் கைப்பற்றும் சதித் திட்டமொன்று தீட்டப்பட்டது.

இந்தச் சதியின் முக்கியமான மூவரில் ஒருவர் சிறில் திசநாயக்கா. இத்திட்டம் நிறைவேறியிருந்தால் அவருக்கு பொலிஸ்மா அதிபர் பதவி உபகாரமாக வழங்க உறுதியளிக்கப்பட்டது.

ஆனால் கொழும்பு பிராந்திய பொலிஸ் சுப்பிரின்டனாகவிருந்த ஸ்ரான்லி சேனநாயக்கா இந்த சதித்திட்டத்தை பகிரங்கமாக்கி சகலதையும் தவிடுபொடியாக்கி விட்டார்.

ஷஜங்கிள்’ திசநாயக்கா என்ற பட்டப்பெயரைக் கொண்ட சிறில் திசநாயக்காவின் பதவி பறிக்கப்பட்டு, நீதி விசாரணையின்பின் பத்தாண்டு சிறை விதிக்கப்பட்டது. இவரது மகளின் புத்திரரான ரவி கருணநாயக்கா இப்போது இலங்கை அரசியல்வானில் பேசுபொருளாகியுள்ளார்.

நல்லாட்சி உருவானதைத் தொடர்ந்து ரணில் விக்கிரமசிங்கவினால் மத்திய வங்கி ஆளுனராக நியமிக்கப்பட்டவர் அவரது நண்பராக அர்ஜூன மகேந்திர. இவரது பதவியின்போது இடம்பெற்ற பிணைமுறை ஊழலில் இரவது மருமகரான அலோசியஸ் நிரம்பவே பங்கு கொண்டவர்.

அலோசியசுடன் ரவி கருணநாயக்கா மேற்கொண்ட முறைகேடுகள் சம்பந்தமாக ஜனாதிபதி கமி~ன் முன்னிலையில் பல விடயங்கள் அம்பலமானது.

தாம் குடியிருந்த வீட்டின் வாடகையை அலோசியஸ் செலுத்தியது தமக்குத் தெரியாது என்று ரவி கருணநாயக்கா விசாரணையின்போது கூறியதை யார் நம்புவார்கள்?

இந்த நிலையில், இவர் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையை மகிந்த தலைமையிலான ஒன்றிணைந்த எதிரணி நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தது.

மைத்திரியின் சுதந்திரக் கட்சியினர் மட்டுமன்றி, ரணிலின் ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த பலரும் ரவி கருணநாயக்கா பதவி விலக வேண்டுமென வலியுறுத்தினர்.

இதற்கெல்லாம் அசைந்து கொடுக்க இவர் மறுத்து வந்ததால் நல்லாட்சிக்குள் எதிர்பாராத நெருக்கடி உருவானது.

இதனால் பிரதமராலோ ஜனாதிபதியாலோ ரவி கருணநாயக்காவைக் காப்பாற்ற முடியாத கட்டம் வந்தது.

விசாரணை முடியும்வரை தற்காலிகமாகவேனும் அமைச்சர் பதவியிலிருந்து விலகுமாறு இவர்கள் இருவரும் கேட்டும் ரவி கருணநாயக்கா சம்மதிக்கவில்லை.

கடந்த சனிக்கிழமை (ஆகஸ்ட் 9ம் திகதி) இரவு நெருக்கடி அதன் உச்சத்தைத் தொட்டது.

நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதிக்கப்படுமானால் அது நிச்சயம் நிறைவேறும் என்ற சூழலில் மனமில்லாத போதிலும் பதவி துறக்க வேண்டிய நிலைக்கு ரவி கருணநாயக்கா தள்ளப்பட்டார்.

10ம் திகதி வியாழக்கிழமை பகல் ஒன்றரை மணிக்கு நாடாளுமன்றம் சென்ற இவர், தாம் பதவி விலகும் தன்னிலை விளக்கமொன்றை வழங்கினார்.

தம்மீதான குற்றச்சாட்டுகள் அர்த்தமற்றவை என்றும், இலங்கையில் புதியதொரு அரசியல் கலாசாரத்திற்காகவும் ஜனநாயக நல்லாட்சிக்காகவும் தாம் பதவி துறப்பதாக இவர் தெரிவித்தபோது பலரும் புருவத்தைச் சுழித்தனர்.

தமது நிலைப்பாட்டுக்கு உதாரணமாக திருக்குறள், தம்மபதம், பைபிள், குர்ஆன் ஆகியவற்றிலிருந்து நேர்மை மற்றும் ஒழுக்கம் பற்றிய மேற்கோள்களைக் காட்டியது நாடாளுமன்ற வரலாற்றில் நல்லதொரு நகைச்சுவையாக அமைந்தது.

ஜனாதிபதி, பிரதமர், சக அமைச்சர்கள், கட்சியின் முக்கியஸ்தர்களின் அழுத்தமான நெருக்குதல் காரணத்தாலேயே இவர் பதவி துறந்தார் என்பது பகிரங்க ரகசியம்.

ஆனால் இவரது உரையில், தாம் தாமாகவே முன்வந்து பதவி துறந்தது என்றதும், புதிய அரசியல் கலாசாரத்துக்கான பிள்ளையார் சுழி என்றதும் அப்பட்டமான பம்மாத்து.

இந்தப் பதவி துறப்புகள் தொடர்பான இரண்டு பிரமுகர்களின் கருத்துகள் சுவாரஸ்யமானவை.

விசாரணை ஆணைக்குழுவின் முழுவின் முன்னால், ஆளும் தரப்புக்குச் சாதகமான செயற்பாடுகள் எதுவும் கிடையாதென்பதை இவரது பதவி விலகல் காட்டுவதாக பிரதமர் ரணில் தெரிவித்ததும்….

குற்றம் நிரூபிக்கப்படாது விசாரணை நடைபெறுகையிலேயே ஓர் அமைச்சர் பதவி விலகியது முன்னைய எந்த ஆட்சியிலும் இடம்பெறாத முக்கிய விடயம் என்று கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்ததும்…..

யாருக்கு யார் மாலை போடுகிறார்கள்? அறிவுள்ள மக்களை முட்டாள்கள் என நினைக்கிறார்களா?

தென்னிலங்கையின் அரசியலைப் பொறுத்தளவில் நல்லாட்சி அரசாங்கத்துக்கு கண்டத்துச் சனி ஆட்சி செய்துதுபோலத் தெரிகிறது.

இப்படியாகத் தெற்கில் காட்சிகள் மாறிக்கொண்டிருக்கையில், வடக்கு மட்டும் சும்மா இருக்க முடியுமா, இங்கும் அதே நிலைதான்.

சட்டரீதியான விசாரணை நடத்தி, குற்றவாளியாகக் காணப்படாதவரை, பதவி விலக மறுத்து வந்த வடமாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் விசாரணை நடைபெற முன்னரே பதவி துறக்க நேர்ந்துவிட்டது.

கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் யாழ்ப்பாணத்திலுள்ள முதலமைச்சரின் இல்லத்தில் பங்காளிக் கட்சிகளுடன் தலைவர்களுடன் ஒரு கூட்டம் நடத்தியதன் விளைவே இந்தப் பதவி விலகல்.

தமது நிலைப்பாட்டில் இருந்து இம்மியளவும் விட்டுக்கொடுக்க முதலமைச்சர் தயாராகவில்லை.

13வது திருத்தத்தின்கீழ் தமக்குள்ள அதிகாரங்களை நிறைவேற்ற உரிமை கோரிய அவருக்கு தமிழரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜான தவிர மற்றைய மூன்று பங்காளிக் கட்சிகளின் தலைவர்களும் பூரண சம்மதம் வழங்கினர்.

வடமாகாணசபையில் கூட்டமைப்பின் முப்பது உறுப்பினர்களில் பதினைந்து பேர் மாவை – சுமந்திரன் பக்கமும், பதினைந்து பேர் முதலமைச்சர் பக்கமும் நின்றதால் அண்மையில் முதலமைச்சர்மீது முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் பிசுபிசுத்தது எல்லோரும் அறிந்த கதை.

இதனால் தமது பக்கத்தை பதினாறாக்குவதற்காக வணிகர் ஜெயசேகரத்தை மாகாணசபை உறுப்பினராக மாவையர் நியமித்தும், முதலமைச்சரின் உறுதியால் அந்த ஒற்றைப் பெரும்பான்மை செயலிழந்து போனது.

அரசியல் தீர்வொன்றைக் காரணம் காட்டி அதுவரை வடமாகாணசபையை அமைதிப்படுத்த விரும்பிய சம்பந்தன், முதலமைச்சருக்குச் சாதகமாக மாறி அவரை அவர்பாட்டில் இயங்க விடுவதாக அறிவித்தார்.

அங்கு அமைதியாக இருந்தபோதிலும் மாவையரால் இது ஜீரணிக்க முடியாது போயிற்று.

இதன் எதிரொலியாக மறுநாள் தமது கட்சி உறுப்பினர்களுடன் ஒரு கூட்டம் நடத்தி மாகாணசபையிலுள்ள தமிழரசு கட்சி உறுப்பினர்கள் எந்தப் பதவியும் ஏற்பதில்லையென்ற முடிவை எடுத்தார்.

இதன் முதல் பலிக்கடாவானவர், பாவம் – அமைச்சர் ப.சத்தியலிங்கம்.

தமிழரசுக் கட்சியின் முக்கியத்தரும் புதிய பல நெருக்கடிகளின் பிதாமகருமான வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் எவ்வாறு தொடர்ந்து இப்பதவி வகிக்கிறார்? தமிழரசு கட்சியினர் எந்தப் பதவியையும் ஏற்பதில்லையென்ற முடிவில் இவர் விதிவிலக்கா?

வடமாகாணசபையின் முதலாவது நான்கு அமைச்சர்களில் இதனை எழுதும்போது எஞ்சியிருப்பவர் ரெலோ அமைப்பைச் சேர்ந்த போக்குவரத்து மற்றும் மீன்பிடி அமைச்சர் டெனீஸ்வரன். இவர்மீதான ஊழல் விசாரணை ஒருபுறமிருக்க இவரை ரெலோவிலிருந்து நீக்கிவிட்டதால் அமைச்சர் பதவியிலிருந்து நீக்குமாறு முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பப்பட்டு விட்டது.

ஆனால் இவரோ பதவி விலக மறுத்து வருவதுடன் தாம் ஒரு சட்டத்தரணி என்பதால் தம்மை பதவியிலிருந்து நீக்கினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் மிரட்டுகிறார்.

மிரட்டப்படுபவர் உச்ச நீதிமன்ற நீதியரசராக இருந்தவர். மிரட்டுபவர் ஒரு சட்டத்தரணி என்பதைக் கவனிப்போமாக!

புதிய அரசியல் கலாசாரத்துக்காக கொழும்பில் அமைச்சரொருவர் பதவி துறக்கிறார்.

மற்றொரு அரசியல் கலாசாரத்தில் வடமாகாணசபை அமைச்சரொருவர் பதவி துறக்க மறுக்கிறார்.

நீதித் தராசு அங்குமிங்கும் ஆடாது ஒழுங்காக தன் பணியைச் செய்ய வேண்டுமென்பதே வடக்கின் முதலமைச்சரைத் தெரிவு செய்த மக்களின் எதிர்பார்ப்பு.

முகப்பு
Selva Zug 2