புதன், 24 ஜனவரி 2018
Selva Zug 2

சர்வதேசத்திடம் வடமாகாணத்தை விற்கிறார் சத்தியலிங்கம்!

முதலமைச்சரினை தாண்டி வடக்கினை கொழும்பு அரசுடன் இணைந்து சர்வதேசத்திடம் அடகு வைக்கும் நடவடிக்கையினில் சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் ஈடுபட்டுள்ளமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டுமென வடமாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் கோரியுள்ளார்.

பதிவு இணையத்திற்கு அவர் வழங்கிய விசேட செவ்வியில் மேலும் தெரிவிக்கையில்:-

”சேப்பா” எனப்படுகின்ற சர்வதேச சிங்கள அமைப்பு வடகிழக்கு மாகாணங்களை முன்னிறுத்தி வடமத்திய மாகாணம் மற்றும் ஊவா மாகாணத்திற்கும் சர்வதேச நிதிகளை பெறமுற்பட்டுள்ளது. அதற்கு வடக்கின் நுழைவாயில் மற்றும் கிழக்கின் நுழைவாயிலென பெயரிட்டு புலம்பெயர் தமிழ்களிடையேயும் சர்வதேசத்திடமும் நிதியை தேட முற்பட்டுள்ளது.

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ரணில் – சுமந்திரன் கும்பலின் கூட்டாக வடகிழக்கினை காட்டியும் கூட்டியும் கொடுத்து மேற்கொள்ளப்படவிருந்த நிதி பிடிக்கும் வேலை பற்றி முதலமைச்சர் அறிந்திருந்தமையினால் அதற்கு அவர் ஒத்துழைக்க மறுத்தமையினால் அம்முயற்சி இதுவரை வெற்றி பெற்றிருக்கவில்லை.

இந்நிலையில் முதலமைச்சரைப் புறந்தள்ளி சுகாதார அமைச்சர் சத்தியலிங்கத்தை தனித்து அழைத்து சென்று இலங்கை அரசு இப்போது நிதி தேடிவருகின்றது.

கூட்டு அமைச்சரவை பொறுப்பினை தாண்டி தனித்து இலங்கை அரசின் கூட்டாளி அமைச்சராக சத்தியலிங்கம் வடமாகாணசபையினை சர்வதேசமெங்கும் விற்பனை செய்துவருகின்றார். அவர் வடமாகாண சுகாதார அமைச்சின் ஆலோசனைக்குழு உறுப்பினர்களான எமது கருத்துக்களினை கூட பெற்றுக்கொள்ளாது தெற்கிற்கு புலம்பெயர் தமிழர்களது நிதியினை சுருட்டிக்கொடுப்பது துரோகமே.

அத்துடன் இத்தகைய நடவடிக்கைகளிற்கான முகவராக செல்வின் இரேனியஸ் என்பவரை எமது ஆலோசனைகளை பெறாது நியமித்துள்ளார். இதே நபர் இலங்கை அமைச்சரான றிசாத் பதியூதீன் உள்ளிட்டவர்களதும் ஆலோசகராக இருப்பது உண்மையினை வெளிப்படுத்துவதாகவும் விந்தன் கனகரட்ணம் மேலும் தெரிவத்தார்.

இந்நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக கொழும்பில் நடைபெற்ற கூட்டத்தில் புலம்பெயர் தமிழர்கள் பலர் வடமாகாணசபையும் இலங்கை அரசின் நிதி தேடும் கூட்டு பங்காளியென அடையாளம் காட்டி வருவிக்கப்பட்டுள்ளனர். அவர்களிற்கு முன்வைக்கப்படுகின்ற வேலைத்திட்டங்கள் முதலமைச்சரது அங்கீகாரமற்றவையென்பது தெரியாது. அவர்கள் அள்ளி வடக்கு கிழக்கு மக்களிற்கு வழங்குகின்றதன் பெரும்பகுதி சிங்கள பகுதிகளிற்கே செல்லப்போகின்றது.

இத்தகைய பாரிய ஊழலில் ஈடுபட்டுள்ள சத்தியலிங்கத்தின் துரோகம் அவர் யாருடைய பங்காளியாக செயற்படுகின்றார் என்பதை கண்டறிவதுடன் , அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பினை மீறியமை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டுமென விந்தன் கனகரட்ணம் கோரியுள்ளார்.

அதிலும் முதலமைச்சர் புதிதாக அமைக்கவுள்ள விசாரணை குழுவில் இவ்விவகாரமும் ஆய்வு செய்யப்படவேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

முகப்பு
Selva Zug 2