எது உண்மை? எது நகல்??
சுயாதீன சிவில் அமைப்பொன்றை நிறுவ நாளை சனிக்கிழமை மதத்தலைவர்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் நாளை தமிழர் தலைநகர் திருகோணமலையில் ஒன்று கூடவுள்ளன.
வெளிநாட்டு நிதிகளிலான சிவில் போலி அமைப்புக்களை தகர்ந்தெறிந்து மக்கள் தலைமைத்துவத்தை வலியுறுத்தி நாளை சந்திப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே அரசியல் தரப்புகளும் சிவில் சமூக அமைப்புகளும் இணைந்து பொது இணக்கப்பாட்டிற்கு வருதல் அவசியமாகியுள்ளது என யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசிய பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.
இனப்பிரச்சினைக்கான நிலையான அரசியல் தீர்வாக, தமிழ் மக்கள் தேர்தல்களில் தொடர்ந்து கூட்டாட்சி (சமஸ்டி)த் தீர்வை வலியுறுத்தி ஆணை வழங்கி வந்துள்ளனர்.
இருப்பினும், அக்கோரிக்கையினைப் புறக்கணிக்கும் வகையில், கடந்த 2015 2019 காலப்பகுதியில் பதவி வகித்த அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்ட ஏகிய இராஜ்ய (ஒற்றையாட்சி அரசு) அரசியல் யாப்பு வரைபை நாட்டிற்கான புதிய அரசியல் யாப்பாக கொண்டு வந்து நிறைவேற்றுவோம் என சனாதிபதி அனுரகுமார திசாநாயக்கா அவர்கள் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்திருந்தார்.
அதன் பின்னரும் ஜனாதிபதி. பிரதமர் உள்ளிட்ட நாட்டின் உயர் தலைவர்கள் பல முக்கிய சந்தர்ப்பங்களில் குறித்த அரசியல் யாப்பை நிறைவேற்றும் செயற்பாடுகள் முன்னோக்கிச் சென்று கொண்டிருப்பதாக உறுதிப்படுத்தியுள்ளனர்.
அதனைச் செயல்படுத்துவதற்கான கலந்துரையாடல்களும் பல கட்டங்களாக இடம்பெற்று வருகின்றன. தமிழர்கள் தேர்தல்களில் வழங்கிய அரசியல் ஆணைக்கு முரணாக கொண்டுவரப்படவுள்ள ஏகிய இராஜ்ய யாப்பு வரைபை நிராகரித்து அதற்குப் பதிலாக, தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட்ட, தமிழ்த் தேசத்தின் தனித்துவமான இறைமையின் அடிப்படையில், சுயநிர்ணய உரிமையை அனுபவிக்கக்கூடிய கூட்டாட்சி(சமஸ்டி) அரசியல் யாப்பு உருவாக்கப்படுவதையும் உறுதிப்படுத்தும் நோக்கில், சிறீலங்கா அரசின் மீது உள்நாட்டு மற்றும் சர்வதேச மட்டங்களில் அழுத்தங்களை ஏற்படுத்த வேண்டியது மிகவும் அவசியமாகியுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பின்னணியிலுள்ள யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசிய பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.

Post a Comment