திங்கள், 22 ஜனவரி 2018
Selva Zug 2

அரசியல் தீர்வை வலியுறுத்தும் யாழ் ஆயரின் பொங்கல் தினச்செய்தி!

janppirakasamஇலங்கை மண்ணில் தமிழ் மக்கள் நீதியோடு கூடிய ஒரு சுதந்திர வாழ்வை வாழ யாப்பில் உறுதிப்படுத்தப்பட்ட ஒரு நிரந்தர தீர்வு எட்டப்பட வேண்டுமென யாழ்.ஆயர் தனது பொங்கல் வாழ்த்து செய்தியினில் தெரிவித்துள்ளார்.

ஆவர் விடுத்துள்ள பொங்கல் வாழ்த்து செய்தியினில் 2017ஆவது ஆண்டு பொங்கல் விழா தமிழ் கூறும் நல்லுலகு முழுவதும் கொண்டாடப்படும் வேளை இலங்கையிலும் புலம் பெயர்ந்து உலகின் பல பாகங்களிலும் பொங்கல் விழாவை நன்றியோடு கொண்டாடும் தமிழ் மக்கள் அனைவர்க்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்வடைகிறோம்.

பொங்கல் விழா நன்றியின் விழா. நம்மைத் தாங்கும் நிலம் நமக்குத் தருகின்ற அனைத்து பயன்களுக்கும் நன்றி சொல்லும் விழா. முதல் விளைச்சலை இறைவனுக்கும் இயற்கைக்கும் காணிக்கையாக்கும் விழா. நன்றி கூறும் பண்பு அனைத்து மனிதருக்கும் மிகவும் தேவையான ஒன்று. நம்மைப் படைத்த இறைவன் – நம்மோடு வாழும் அயலவர் – நம்மை காக்கும் இயற்கை ஆகிய மூவர்க்கும் நாம் என்றுமே நன்றியுடையவர்களாக இருக்கவேண்டும்.

இறைவன் நம்மைப் படைத்து பாதுகாத்து வருகிறார். அன்றாடம் வழிநடத்தி வருகிறார். அயலவர்கள் நம்மோடு அன்பையும் நட்பையும் பேணிவருகிறார்கள். இணைந்து வாழத் துணை புரிகிறார்கள். இயற்கை நமக்குத் தேவையானவற்றைத் தந்து உதவுகிறது. என்ன செய்தாலும் நம்மைத் தாங்கி வருகிறது. இந்த மூன்று நிலையினரை நோக்கியும் நம் உள்ளம் எனறுமே நன்றியால் பொங்கிக்கொண்டிருக்க வேண்டும். அனேகமான வேளைகளில் நாம் நன்றி கூறவும் நன்றியாக இருக்கவும் மறந்துவிடுகிறோம்.

இது அவர்கள் பணி – இது அவர்கள் கடமை – இதற்காக பணம் செலுத்தப்படுகின்றமையால் அவர்கள் இதைச் செய்யவேண்டுமென எடுக்கின்ற மனப்பாங்கே நம்மில் மேலோங்கி இருக்கிறது. நன்றி என்ற வார்த்தையை இனிவருங்காலத்தில் அதிகம் பாவிக்கத் தொடங்குவோம். இதனால் இன்னும் அதிக உதவியையும் மதிப்பையும் பெறுவோம். புத்தாண்டுச் செய்தியில் தெரிவித்த முக்கிய விடயத்தை இங்கு திரும்பவும் வலியுறுத்த விரும்புகிறோம்.

இலங்கை மண்ணில் தமிழ் மக்கள் நீதியோடு கூடிய ஒரு சுதந்திர வாழ்வை வாழ யாப்பில் உறுதிப்படுத்தப்பட்ட ஒரு நிரந்தர தீர்வு எட்டப்பட வேண்டும். என்றுமில்லாதவாறு இலங்கை மண்ணில் நல்லெண்ண அரசு ஒன்று தோன்றி இன மத அரசியல் நல்லிணக்கம் உருவாகியிருக்கின்ற இவ்வேளை நீதியோடு கூடிய ஒரு நிரந்தர தீர்வினை யாப்பின் வழி அமைத்துக் கொள்ள மிகச்சிறந்த நேரமாகும்.

இந்த நேரத்தை சிறந்த விதமாக இராஜதந்திர ரீதியாகப் பயன்படுத்தி வெற்றியடைய வேண்டியது இலங்கை வாழ் தமிழ் மக்கள் – புலம்பெயர்ந்து வாழ்வோர் – தமிழ் அரசியற் தலைவர்கள் – புத்தி ஜீவிகள் மற்றும் சம்மந்தப்பட்ட அனைவரின் கடமையாகும். அரசியற் தலைவர்கள் தமது சொந்த விருப்பு வெறுப்புக்களைத் துறந்து – அரசியல் மற்றும் கட்சி எண்ணங்களை கடந்து – ஒட்டு மொத்தமாக இணைந்து அரும்பாடுபட்டு உழைக்க வேண்டுமென மீண்டும் தமிழ்மக்கள் பெயரால் வேண்டுகிறோம்.

மலர்ந்துள்ள 2017ஆவது புதிய ஆண்டில் கொண்டாடப்படும் பொங்கல் விழா தமிழ் மக்கள் அனைவர்க்கும் இறையாசீர் நிறைந்த மகிழ்வான ஆண்டாக நீதியோடு கூடிய நிரந்தர தீர்வைப் பெற்றுத் தரும் ஆண்டாகட்டுமென கலாநிதி யஸரீன் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

முகப்பு
Selva Zug 2