இனஅழிப்பே: தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம்!
ஈழத் தமிழர்களாகிய நாம் இலங்கைத் தீவில் தனித்துவம் மிக்க ஒரு தேசிய இனமாகவும், தேசமாகவும் வாழ்ந்து வருகிறோம். வரலாற்றுக்கு முற்பட்ட
காலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட, மரபு வழித் தாயகத்தைக் கொண்ட, தனித்துவமிக்க பண்பாட்டைக் கொண்ட ஒரு தேசம் ஆவோம் இலங்கைத் தீவு பல்லின, பலமத, பல மொழி, பல் கலாசாரத்தைக் கொண்ட ஒரு தீவாகும். இலங்கைத் தீவின் பல்லினத்தன்மையை ஏற்றுக்கொள்ள மறுத்ததன் விளைவே இனப்பிரச்சினை தோற்றம் பெறுவதற்கும் கூர்மை அடைவதற்கும் இறுதியில் விஸ்வரூபம் எடுப்பதற்குமான மூல காரணமாகும். தமிழ் மக்களுடைய தேசிய இருப்பை அழிக்கும் செயற்பாடுகளே இன அழிப்பாகுமென தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் தெரிவித்துள்ளது.இன்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பின் அலுவலகத்தில் தேர்தல் விஞ்ஞாபன வெளியீடு நிகழ்வு இடம்பெற்றது.
தமிழீழ விடுதலை இயக்கம் , தமிழ் மக்கள் கூட்டணி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ்த் தேசியக் கட்சி, ஜனநாயகப் போராளிகள் கட்சி, தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் ஆகிய ஏழு கட்சிகளும் தமிழர்தாயகத்தைச் சேர்ந்த அரசியற் செயற்பாட்டாளர்கள், கருத்துருவாக்கிகள், புத்திஜீவிகள், சிவில் சமூகங்கள், அரசசார்பற்ற அமைப்புகள், தொழிற்சங்கங்கள், கிராமமட்ட அமைப்புகள்;, தொழில்சார் அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகள், மாணவ அமைப்புகள் இணைந்து உருவாக்கிய மக்கள் அமைப்பாகிய தமிழ்மக்கள் பொதுச்சபையும் இணைந்து உருவாக்கிய ஒரு கட்டமைப்பே தமிழ்த்தேசியப் பொதுக் கட்டமைப்பு ஆகுமென விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
ஈழத் தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வைக் காணும் பொருட்டு சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்து, அவர்கள் தங்களுக்கு என்ன தீர்வு வேண்டும் என்பதை நிர்ணயிப்பதற்கு ஒரு பொது வாக்கெடுப்பு அவசியம் .தமிழ் மக்களின் விடுதலைக்காக தமது இன்னுயிர்களைத் தியாகம் செய்தவர்களைக் கௌரவிக்கும் வகையில் தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிப்பது தமிழ் மக்களின் தேசியக் கடமையாகுமெனவும் பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment