துணை வேண்டுமாம்!

 


சட்டவிரோதமாக இலங்கை கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களை கைது செய்யும் செயற்பாட்டில் கடற்படையினர் தயக்கம் காட்டுவதாக அரச கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டத்தில் சட்டவிரோத மீன்பிடி செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்டது.

இந்திய மீனவர்களது  அத்துமீறலை கட்டுப்படுத்துவதற்காக பல பேச்சுவார்த்தைகளிலும் நான் கலந்து கொண்டேன். ஆனால் அந்த பேச்சுவார்த்தைகளில் எந்த சாதகமான முடிவும் எட்டப்படவில்லை அதேபோல இலங்கை கடற்படையினரும் இந்திய மீனவர்களை கட்டுப்படுத்துவதில் பின்னடிப்பதாகவே நான் கருதுகின்றேன்.

நான் கடந்த சில நாள்களாக ஒரு தீர்மானத்துக்கு வந்திருக்கின்றேன். தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தியா சென்று இந்த விடயம் தொடர்பில் அங்குள்ள முதலமைச்சருடன் கலந்துரையாடி ஒரு உண்மையான நிலைமையினை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும் என்பது எனது நிலைப்பாடு. அதற்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒத்துழைப்பார்கள் என நம்புகின்றேன் என டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இதனிடையே எல்லை தாண்டி மீன்பிடித்த இந்திய மீனவர்கள் 17 பேரை நிபந்தனைகளுடன் விடுதலை செய்து ஊற்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 18 மாத சாதாரண சிறைத் தண்டணை என்ற நிபந்தனை அடிப்படையில் இந்திய மீனவர்கள் இன்று விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


No comments