ஜேவிபி யாழ்ப்பாணத்தில் நாடகம் நடத்துகின்றது?பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக் கொள்வதற்காக ஜே.வி.பி. தற்போது நீலிக்கண்ணீர் வடிப்பதாக குற்றஞ்சாட்டிய ஐக்கிய சோசலிசக் கட்சி பொதுச் செயலாளர் சிறிதுங்க ஜயசூரிய - ஜே.வி.பி. மஹிந்த ராஜபக்ஷவின் பங்காளிகளே என குற்றஞ்சாட்டினர். 

இறுதி யுத்த வெற்றியில் எமக்கு பாரியளவு பங்கு இருப்பதாக  தெரிவித்த சுனில் ஹந்துன்நெத்தியின் கருத்து தொடர்பாக யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளரொருவர் கேள்வியெழுப்பிய போதே ஐக்கிய சோசலிசக் கட்சி பொதுச் செயலாளர் சிறிதுங்க ஜயசூரிய இதனை தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில், இராணுவத்தினருக்கு ஆட்களை திரட்டி தமிழ் மக்களுக்கு எதிராக யுத்தத்தை மேற்கொள்வதற்கான அடித்தள வேலைகளை ஜே.வி.பியே செய்தது. ஆனால் இன்று தமிழ் மக்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களின் வாக்குகளை அபகரிப்பதற்காக போலியான  கதைகளை கூறுகின்றனர் - என்றார். 

போராட்டகாரர்கள் மீது இரகசியமான முறையில் இரசாயணத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதா என்ற வலுவான சந்தேகம் எமக்கு காணப்படுகின்றது என ஜேவிபி தலைவர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்த கருத்து தொடர்பாக கேள்வியெழுப்பியபோது, 

2009 இறுதி யுத்தத்தின் போது  இரசாயன ஆயுதங்கள் இரசாயன குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக  அப்போது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் அதனை அப்போது கருத்தில் கொள்ளாதவர்கள் - தங்களுக்கு பாதிப்பு என்றவுடன் தற்போது இரசாயண தாக்குதல் இடம்பெற்றதாக கருத்து கூறுகின்றனர். 

மஹிந்த ராஜபக்ஷ ரணில் விக்கிரமசிங்கவுடன் தற்போது எவ்வாறான உறவை கொண்டுள்ளாரோ அதேபோன்று யுத்தம் இடம்பெற்றபோது  மஹிந்த ராஜபக்சவுடன் ஜேவிபியினர் மிக நெருங்கிய தொடர்பை வைத்திருந்தனர். யுத்தத்திற்கு தேவையான ஆட்களை திரட்டுவதில் இருந்து சகல வேலைகளையும் செய்தது ஜேவிபியே. ஆனால் இன்று தமிழ் மக்களின் வாக்குகளை கவர்வதற்காக நீலி கண்ணீர் வடிக்கின்றனர். இதனை ஏற்றுக் கொள்ள முடியாது - என்றார்.

No comments