புதிய சட்டம்:இணையங்களிற்கு சிக்கல்!



இணையவழி ஊடகங்கள் மூலமாக பகிரப்படும்  போலி செய்திகளை கட்டுப்படுத்தல் என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் புதிய சட்ட வரைபு நடவடிக்கையானது கருத்து சுதந்திர உரிமையை   பாதிக்கும் விடயமென   ஊடக அமைப்புக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளன.

இணையவழி ஊடகங்கள் மூலம் வெளியிடப்படும்  பொய்யான மற்றும் பொது மக்களை தவறாக வழிநடத்தும்  பதிவிடல் அல்லது அறிக்கையிடலுக்கு எதிராக சட்டமொன்றை உருவாக்குவது குறித்து சட்டவரைஞர் திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்குவதற்கு இலங்கை அமைச்சரவை முற்பட்டுள்ளது.

இது கருத்து தெரிவிக்கும் உரிமை மற்றும் ஊடக சுதந்திரத்தை பாரிய அளவு பாதிக்கும் செயற்பாடாக காணப்பட முடியும் என்பது தொடர்பில் ஊடக அமைப்புக்கள் முன்கூட்டியே எச்சரித்துள்ளன.

இணையம் ஊடாக போலி செய்திகளை பரப்புதல் மற்றும்  வெறுக்கத்தக்க பேச்சு மூலம் ஏற்பட கூடியதான சமூக பிளவுகள், மத மற்றும் இன ரீதியான மோதல்களுக்கு எதிராக மற்றும் சமூக நலன் கருதி  செயல்படும் தனிநபர்கள் மற்றும் குழுக்களுக்கு உத்தேச சட்ட வரைபு நடவடிக்கையானது பாதிப்பை ஏற்படுத்த கூடும். ஆகவே, அத்தகைய சட்ட இயற்றுதல் நடவடிக்கையை  அனுமதிக்க முடியாது.

தற்போது காணப்படும் சட்ட ஏற்பாடுகளுக்கு  பதிலாக,அரசாங்கத்தின் தலையீடு மற்றும் அடக்குமுறை காரணமாக புதிய சட்டங்களை இயற்றுதல் “போலி செய்தி” என்பதை அதிகாரிகளுக்கு தேவைப்படும் விதத்தில் வரைவிலக்கணம் இட்டு ஊடக அடக்கு முறைகள் மற்றும் கருத்து வெளிப்படுத்தும் உரிமைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில்  செயல்படுவதற்கான அதிகாரம் அளிக்கும் செயல்பாடாகும்.

அமைச்சரவை தீர்மானம் தொடர்பில் செய்தி அறிக்கை வெளியிட்டுள்ள அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ள விடயமாவது ,ஜனநாயக நிறுவனங்களை பலவீனப்படுத்த போலி செய்திகள் பயன்படுத்தப்படுகின்றமையே சட்ட முன்மொழிவுக்கான பிரதான காரணமாகவும் குறிப்பிடப்பட்டுள்ளமை கவனிக்கத்தக்கதாகும். 

அரசாங்கம் அல்லது பொறுப்பு கூற வேண்டிய நபர்களின் முறைகேடுகள்,வினைத்திறன் அற்ற செயற்பாடுகளை விமர்சிக்கும் செயற்பாடானது "போலி செய்தி"” என்பதாக வரைவிலக்கணப்படுத்தி ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கும் கருவியாக சட்டமானது பயன்படுத்த முடியும் என்பதை கவனத்தில்கொள்ள வேண்டியுள்ளது.

குறிப்பாக 2002 ல் ரத்து செய்யப்பட்ட குற்றவியல் அவதூறு சட்டத்தின் கீழ் ஊடகவியலாளர்கள் துன்புறுத்தப்பட்டமை நினைவுகூர்வதுடன், இணையவழி  ஊடகங்களைக் கட்டுப்படுத்துவதற்காக இயற்றப்படும் ஒரு சட்டம் குறித்த எல்லைக்குள் மாத்திரம் கட்டுப்படுத்தப்படும்  என எதிர்பார்க்க முடியாதெனவும் ஊடக அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.


No comments