நாமல் குமாரவும் அமித் வீரசிங்கவும் கைது


குளியாப்பிட்டிய, மினுவாங்கொட பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை தூண்டி விட்டனர் என்ற குற்றச்சாட்டில், ஊழல் எதிர்ப்பு படையணியின் பணிப்பாளர் என கூறிக் கொள்ளும் நாமல் குமாரவும், மகாசோன் படையணியின் தலைவர் என கூறிக் கொள்ளும் அமித் வீரசிங்கவும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று காலை இவர்களை சிறப்பு காவல்துறை குழுவினர் கைது செய்துள்ளனர்.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் கோத்தாபய ராஜபக்ச ஆகியோரைப் படுகொலை செய்யும் சதித் திட்டம் தொடர்பாக தகவல்களை வெளியிட்டு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய நாமல் குமார, வரகாபொலவில் இன்று காலை கைது செய்யப்பட்டார்.

அதேவேளை, கண்டியில் கடந்த ஆண்டு முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகளைத் தூண்டி விட்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பல மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த, மகாசோன் படையணியின் தலைவர் அமித் வீரசிங்கவும் இன்று காலை தெல்தெனியவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

முஸ்லிம்களுக்கு எதிராக கடந்த சிலநாட்களாக கம்பகா, குருணாகல மாவட்டங்களில் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளை தூண்டி விட்டனர் என்ற குற்றசாட்டிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

No comments