நரேந்திர மோடியா; நேசமணியா!

இந்திய பிரதமராக மோடி மீண்டும் பதவியேற்கும் நேரத்தில் உலக ஊடகம் அனைத்தின் கவனத்தையும் , மக்களின் ஈர்ப்பையும் பெறுவதில்  முதன்மையாக இருக்கவேண்டிய  மோடிக்கு சவால் விடுமளவுக்கு இணையத்தில் வளர்ந்து உலக அளவில் வலம்வருகிறார் இந்த நேசமணி,


அப்போப்போ இணையங்களில் குறியீட்டு சொற்கள் முன்னிலையாகி வருவது வளமை அப்படி ஒரு குறியீட்டு பெயர்ச்சொல்  #Pray_for_Neasamani  என்பது இந்திய அளவில் மட்டுமல்லாது உலக அளவில் முன்னிலை வகிப்பதோடு பிபிசி போன்ற ஊடகங்களையும் இதை பற்றி பேசவைத்துள்ளது.

சிவில் என்ஜினியர்ஸ் லேர்னர்ஸ் என்கிற முகநூல்  பக்கத்தில் சுத்தியலின்
படத்தை வெளியிட்டு, உங்கள் நாட்டில் இதன் பெயர் என்ன என்று கேட்கப்பட்டது. அதற்குப் பதில் அளித்த டுபாயில் வசிக்கும்  விக்னேஷ் பிரபாகர் என்கிற தமிழர், இதை நாங்கள் சுத்தியல் என்று அழைப்போம். எதிலாவது இதை வைத்து அடித்தால் டங் டங் எனச் சத்தம் எழும்பும். ஜமீன் பேலஸில் பெயிண்டிங் காண்டிராக்டர் நேசமணியின் தலை இந்தப் பொருளால் தாக்கப்பட்டது. பாவம் என்று பகிடியாக ஃப்ரெண்ட்ஸ் திரைப்படத்தில் புகழ்பெற்ற வடிவேலு நகைச்சுவைக் காட்சியை மையமாக வைத்துப் பதில் அளித்தார். உடனே அவருடைய நண்பர் வெங்கடேஷ், நேசமணி இப்போது நலமாக உள்ளாரா என்று கேள்வியெழுப்ப. இயல்பான நகைச்சுவையாக அமைந்த உரையாடல் பரவத்தொடங்கியது.

இது முன்னிலையாக தொடங்கியதும் விளம்பர யுத்தியாக திரைப்பட நிறுவனங்களும் கீச்சு பதிவாளர்களும் முன்னிலையாக்க தொடங்கினார்கள் அது இன்று உலக அளவில் யார் அந்த நேசமணி  என்று கேள்வி எழுப்பும் அளவிற்கு வந்திருக்கிறது.

இந்தியாவில் இருந்து உருவாக்கி பிரபலமாகிய  gobackmodi என்ற குறியீட்டு சொல்லே அதிகமாக பேசப்பட்டு வந்த நிலையில் அதனை எதிர்கட்சிகளே பணம் கொடுத்து செயல்படுத்துகின்றனர் என்று குற்றம் சுமத்தும் பாஜகவினர் இதனையம்  அவ்வாறே கருதுகின்றனர், காரணம் இன்று மோடி பதவியேற்பு நடைபெறயிருப்பதால்.

#Pray_for_Neasamani எனினும் இந்த குறியீட்டு சொல் முன்னிலையாக காரணமானவரிடம் கேட்ட்டபோது, இது எதேச்சையாக நிகழ்ந்த சம்பவம் இதற்கும் அரசியல் நிகழ்வுக்கும் ஒரு சம்பந்தம் இல்லை என்று கூறியுள்ளார்.

அதேவேளை இந்த நேசமணி பெயருக்கு சொந்தக்காரரான நகைச்சுவை நடிகர் வடிவேலுவிடம்  இந்திய ஊடகம் கேட்டபோது தனது ரசிகர்களுக்கு நன்றியும் கூறியதோடு தான் இந்த சந்தோசத்தை கொண்டாடும் நிலையில் இல்லை என்றும் தனது மாமியார் இறந்துவிட்டதாக கூறியுள்ளார்.

மீம்ஸ் உருவாக்கிகளுக்கும் நகைச்சுவை  கேலி கிண்டல்கள் செய்பவர்களுக்கும் இலகுவாக கிடைக்கக்கூடியதும் ஞாபகத்துக்கு வருவதும் நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் வசனங்களும் திரைக்காட்சி ஒளிப்படங்களுமே.திரைகளில் காணமுடியாது தவிக்கும் வடிவேலுவின் ரசிகர்களுக்கு நாள்தோறும் இணைய வாசிகள் நகைச்சுவை தீனிபோடுகிறார்கள், எது எப்படியோ இன்று மோடியா, நேசமணியா என்ற போட்டியில் வடிவேலுவே வெற்றி பெற்றுள்ளார்.

No comments