புதன், 24 ஜனவரி 2018
Selva Zug 2

தமிழீழ மக்களால் ஒரு போராளியாகவே நினைவு கூரப்படுவார்; காசியானந்தன் இரங்கல்!

தன் வாழ்வில் தன்னைப்பற்றிக்கொஞ்சமும் விளம்பரம் செய்துகொள்ளாத ஒரு பெரிய கொடையாளியாக வாழ்ந்த மருத்துவர் பொன். சத்தியநாதன் அவர்கள் தமிழீழ மக்களால் ஒரு போராளியாகவே நினைவு கூரப்படுவார் என்று உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

இன்று அவுஸ்திரேலியாவில் இயற்கை எய்திய வைத்தியகலாநிதி பொன்.சத்தியநாதன் நினைவாக வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

மருத்துவர் பொன்.சத்தியநாதன் அவர்கள் ஒரு தமிழீழ உணர்வாளர் என்று சொல்வது அவரைப்பற்றிய மிகக்குறைவான மதிப்பீடாகும்.

சத்தியநாதன் அவர்கள் ஒரு தமிழீழ விடுதலைப் போராளியாவார். நான் அறிந்தவரை அவர் நெஞ்சில் ஆழமாக வேர்கொண்டிருந்த உணர்வு தமிழீழ விடுதலை உணர்வேயாகும். ஆயுதம் ஒன்றின் மூலம் மட்டுமே தமிழீழ மக்கள் தங்கள் விடுதலையை சிங்கள இனவெறி ஆட்சியாளரோடு மோதிப் பெறமுடியும் என்பதில் அவர் ஆழமான நம்பிக்கைகொண்டிருந்தார்.

இது அவரிடம் காணப்பட்ட போர்வெறி அல்ல. போர்வெறி கொண்டிருந்த சிங்களவரிடம் இருந்து தமிழீழ மண்ணைக் காப்பதற்காக அவர்கொண்டிருந்த போர் நெறி என்பேன்.

ஈடு இணையற்ற தலைவர் பிரபாகரன் தலைமையில் வீறுமிக்க தமிழீழ விடுதலைப்போர் நடந்துகொண்டிருந்த நேரத்தில் தலைவர் பிரபாகரன் அவர்களை நேரில் சந்தித்து புலிவீரர்களுக்கு செய்தித் தொடர்பு பரிமாற்றத்திற்கான கணனிப் பயன்பாட்டை கற்றுத் தந்ததோடு மட்டுமல்லாமல் ஆயிரத்திற்கும் அதிகமான கணனிகளை அவர் சொந்தப்பணத்தில் வாங்கி போராளிகளுக்கு ஒப்படைத்தவர் சத்தியநாதன்.

பலமுறை தமிழீழத்தில் தங்கியிருந்து காயப்பட்ட போராளிகளுக்கு மருத்துவம் செய்து உடல்நலம் சேர்க்கும் பணியிலும் அவர் ஈடுபட்டார்.

ஈழத் தமிழர்கள் உள்ளடக்கிய உலகத் தமிழர்கள் அனைவரினதும் நலனைக் கருத்திற்கொண்டு பழ.நெடுமாறன் அவர்கள் தலைமையில் நாங்கள் உலகத் தமிழர் பேரமைப்பினை உருவாக்கினோம்.

தமிழ்நாட்டில் தன்னுடைய சொந்தப் பணத்தில் வாங்கி அவர் கட்டிய ஒரு புதிய மாடி வீட்டை உலகத் தமிழர் பேரவை தலைமை அலுவலகமாக பழ.நெடுமாறன் அவர்கள் கையில் ஒப்படைத்தார்.

தமிழ் மொழியிலும் இலக்கியத்திலும் ஆழமான பற்றும் ஈடுபாடும் கொண்டவர் பொன்.சத்தியநாதன் அவர்கள். தமிழ்ச் சொற்கள் உச்சரிப்பு முறைபற்றி அவர் செய்துகொண்டிருந்த ஒரு ஆய்வு பற்றி என்னோடு அவர் கலந்துரையாடியபோது தமிழில் இத்தனை ஆழமான புலமையா இவருக்கென்று நான் வியந்ததுண்டு.

தமிழ் உச்சரிப்புக்குறித்த அவர் ஆய்வு அவர் கணனியில் பதிவாகி இருந்தது. சென்னையில் இதற்கென்று ஏற்பாடு செய்ய்ப்பட்ட ஒரு கலந்தாய்வுக் கூட்டத்தில் இந்த உச்சரிப்பு முறைபற்றி அவர் விளக்கினார். அவருடைய ஆய்வு முழுவடிவில் வரவில்லை.

அவர் கணினிப் பதிவு பாதுகாக்கப்படவேண்டும் நூல் வடிவாக்கப்பட வேண்டும், தமிழ் உச்சரிப்புக் குறித்த ஆய்வு இதுவரை தமிழில் வெளிவந்ததேயில்லை என்ற பெருங்கவலை அவரிடம் இருந்தது.

மருத்துவர் பொன். சத்தியநாதன் அவர்கள் தன் வாழ்வில் தன்னைப்பற்றிக்கொஞ்சமும் விளம்பரம் செய்துகொள்ளாத ஒரு பெரிய கொடையாளியாக வாழ்ந்தார்.

இவர் தமிழீழ மக்களால் ஒரு போராளியாகவே நினைவு கூரப்படுவார். எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

முகப்பு
Selva Zug 2