வருடம் பிறந்து 13 நாட்களில் விபத்துக்களில் 82 பேர் உயிரிழப்பு
இந்த வருடம் பிறந்து கடந்த 13 நாட்களில் இடம்பெற்ற 77 விபத்துக்களில் 82 பேர் உயிரிழந்துள்ளதாக போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்பு பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.
இவ்வாறு இடம்பெற்ற விபத்துகளில் பெரும்பாலானவை மது போதையில் வாகனம் செலுத்தியமையால் ஏற்பட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த ஆண்டின் முதல் 13 நாட்களில் மாத்திரம் 77 பாரிய வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளன. இந்த விபத்துக்களின் விளைவாக மொத்தம் 82 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதேவேளை ஜனவரி முதலாம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றத்திற்காக சுமார் 7,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தற்போது மதுபோதையைப் பரிசோதிப்பதற்காக 75,000 புதிய கருவிகள் விநியோகிக்கப்பட்டு, சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மதுவைத் தவிர ஏனைய போதைப்பொருட்களைப் பயன்படுத்தி வாகனம் செலுத்துபவர்களைக் கண்டறியும் முன்னோடித் திட்டம் தற்போது கொழும்பு பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விசேட பரிசோதனையின் மூலம் 12 வகையான போதைப்பொருட்களைக் கண்டறிய முடியும்.
பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் ஏனைய சாரதிகளை வீதியிலேயே பரிசோதனைக்கு உட்படுத்தும் வகையில், தேசிய மருத்துவ நிறுவனத்தின் உதவியுடன் நடமாடும் போதைப்பொருள் பரிசோதனை ஆய்வகங்களை பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment