ஞானசார சிறை சீருடையில்!



மீள சிறையில் அடைக்கப்பட்டுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு, கைதிகளுக்குரிய சீருடை இன்று (05) பிற்பகல் வழங்கப்பட்டதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

அதற்கமைய, அவரது காவி ஆடை களையப்பட்டு சிறைச்சாலை சீருடையில் அவர் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட ஆறு வருட சிறைத் தண்டனையின் மீதமுள்ள காலத்தை அனுபவிப்பதற்காக, கலகொட அத்தே ஞானசார தேரரை மீண்டும் சிறைக்கு அனுப்புமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தது.

தலைமறைவாகியிருந்த போது கைதான ஞானசார தேரர் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்தே உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

முன்னதாக, அவரை கைது செய்வதற்கு பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

நீதிமன்ற வளாகத்தில் வைத்து பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொடவை அச்சுறுத்தியமை மற்றும் நீதிமன்ற நடைமுறைகளுக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ், 2018-ஆம் ஆண்டில் மேன்முறையீட்டு நீதிமன்றினால் ஞானசார தேரருக்கு 19 வருட கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, அதனை 6 வருடங்களில் அனுபவித்து முடிக்கும் வகையில் தீர்ப்பளிக்கப்பட்டது. 

பின்னர் அவர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments