சாட்டி துயிலுமில்லத்திற்கு தடை!
யாழ்ப்பாணம், வேலணை சாட்டி மாவீரர் துயிலுமில்லத்தில் நினைவேந்தல் நிகழ்வுகளை மேற்கொள்ளத் தடை விதிக்கக் கோரி, வேலன் சுவாமிகள் உள்ளிட்ட நால்வரின் பெயர்களைக் குறிப்பிட்டு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் காவற்துறையினரால் தொடரப்பட்ட வழக்கு விசாரணையை எதிர்வரும் நவம்பர் 20 ஆம் திகதிக்கு மன்று திகதியிட்டுள்ளது.
இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்த காவற்துறையினர், சாட்டி மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் நாள் நிகழ்வைத் தடை செய்ய வேண்டும் என விண்ணப்பம் செய்திருந்தனர்.
அதன்போது, காவற்துறையினர் தடை கோரிய விண்ணப்பத்தில் உரிய சட்டப் பிரிவுகளைக் குறிப்பிடவில்லை எனச் சுட்டிக்காட்டிய நீதவான், சட்டப் பிரிவுகளைத் தெளிவாகக் குறிப்பிட்டு விண்ணப்பம் செய்யுமாறு அறிவுறுத்தியதுடன், வழக்கினை எதிர்வரும் நவம்பர் 20 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.
இதனிடையே வேலணை, சாட்டி பகுதியில் விடுதலைப் புலிகளின் மாவீரர் துயிலுமில்லம் அமைந்திருந்த காணி தம்முடையது எனவும், அதில் மாவீரர் நாள் நிகழ்வுகளை முன்னெடுக்க அனுமதிக்கக் கூடாது எனவும் தம்மைக் காணி உரிமையாளர் என அடையாளப்படுத்தி ஒருவர் ஊர்காவற்துறை காவல் நிலையத்தில் கடந்த வாரம் முறைப்பாடு செய்திருந்தார். அம்முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த காவற்துறையினர், நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுப்பவர்கள் என வேலன் சுவாமிகள் உள்ளிட்ட நால்வரிடம் ஏற்கனவே வாக்குமூலங்களைப் பெற்றிருந்தனர்.
இதனிடையே இம்முறை சாட்டியில் கடந்த ஆண்டு மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்ற பகுதியில் நினைவேந்தல் இம்முறை இடம்பெறாதென ஏற்பாட்டுக்குழு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment