செம்மணி : நீதிமறுப்பின் அடையாளம்!
செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும், ராஜ் சோமதேவாவின் இடைக்கால அறிக்கையை முற்றாக நிராகரித்தும் கவனயீர்ப்புப் பேரணி செம்மணி மனிதப் புதைகுழி பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி தொடர்பில் பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் இடைக்கால அறிக்கையை முற்றாக நிராகரிப்பதாக குறிப்பிட்டு வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினால் அறிக்கை தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
ராஜ்சோமதேவாவின் அறிக்கையையும் அவருடைய உருவப் பொம்மையையும் செம்மணியில் தீயிட்டு எரிக்கப்போவதாக போராட்டக்காரர்கள் முன்னதாக தெரிவித்திருந்த நிலையில் ராஜ்சோமதேவாவின் அறிக்கையையும் அவருடைய உருவப் பொம்மையையும் தீயிட்டு எரிக்கப்படடுள்ளது.
எமக்குத் தேவையானது எலும்புக்கூடுகளின் எண்ணிக்கையை அறிவிக்கும் அறிக்கை மட்டுமல்ல. அந்த எலும்புக்கூடுகளுக்குப் பின்னால் புதைக்கப்பட்டிருக்கும் மனிதர்களின் அடையாளங்களையும், அவர்களின் மரணத்திற்கான காரணங்களையும், அவர்களுக்கு என்ன நடந்தது என்பதையும் வெளிப்படுத்தும் நேர்மையான விசாரணையாகும் என வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் வலியுறுத்தியுள்ளனர்.
செம்மணி என்பது வெறுமனே சில மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்ட ஓர் இடமல்ல. அது ஈழத்தமிழர்களின் வரலாற்றில் நீண்டகாலமாகத் தொடரும் வலிந்து காணாமல் ஆக்கப்படுதல், படுகொலைகள், அரச வன்முறைகள், நீதிமறுப்பு ஆகியவற்றுடன் தொடர்புபட்ட மிக முக்கியமான நீதிக்கான களமாகும்.
தமது உறவுகள் உயிருடன் இருக்கின்றார்களா, கொல்லப்பட்டார்களா, எங்கே புதைக்கப்பட்டார்கள் என்ற கேள்விகளுடன் பல தசாப்தங்களாகப் போராடிக்கொண்டிருக்கும் தாய்மார்களினதும் குடும்பங்களினதும் உணர்வுகளையும் நீதிக்கான எதிர்பார்ப்புகளையும் கருத்திற்கொள்ளாமல் இவ்வாறான ஒரு முக்கியமான விசாரணையை வெறுமனே தொல்லியல் அகழ்வாய்வு - எலும்புக்கூடுகளின் ஆரம்பநிலை அவதானிப்புகளுக்குள் மட்டுப்படுத்திவிட முடியாது.
அறிக்கையில் பல எலும்புக்கூடுகள் தொடர்பில் மரணத்திற்கு முன்பான அல்லது மரணத்தின் போது ஏற்பட்ட காயங்களுக்கான தெளிவான தடயங்கள் கண்டறியப்படவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிருசாந்தி படுகொலை வழக்கின் பிரதான குற்றவாளியான சோமரத்ன ராஜபக்ச, அரியாலையில் இரண்டு பாரிய மனிதப் புதைகுழிகள் இருப்பதாகத் தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டிருந்தார்.
1996–1997 காலப்பகுதியில் அரியாலைப் பகுதியில் பல இராணுவ முகாம்களும் சித்திரவதைக் கூடங்களும் இயங்கி வந்ததாகவும். அந்த வகையில், அரியாலையில் இரண்டு பாரிய மனிதப் புதைகுழிகள் இருப்பதாகவும், அவை அகழ்ந்து பார்க்கப்பட வேண்டும் என்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது குடும்பங்களினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சோமரத்ன ராஜபக்ச உள்ளிட்ட மூன்று பேர் இணைந்து மொத்தமாக 26 இடங்களை மனிதப் புதைகுழிகளாக அடையாளப்படுத்தியுள்ளனர்.

Post a Comment