சிவாஜி புகழுடல் தீயுடன் சங்கமமாகியது!

 




மறைந்த தமிழ் தேசிய பற்றாhளர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் புகழுடல் தீயுடன் இன்று சங்கமமாகியுள்ளது. 

மறைந்த எம்.கே.சிவாஜிலிங்கத்தின் புகழுடலுக்கு விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாளவன் முதல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வரையென ஆயிரக்கணக்கானோர் நேரில் இறுதி அஞ்சலி செலுத்தியிருந்தார்.

மறைந்த எம்.கே.சிவாஜிலிங்கம் தொடர்பில் ஆளுநர் வெளியிட்டுள்ள அஞ்சலிக் குறிப்பில், அவர் பல்வேறு பதவிகளை வகித்திருந்தபோதிலும், ஒருபோதும் தனக்காகவோ அல்லது தன்னைச் சார்ந்தவர்களுக்காகவோ தனிப்பட்ட உதவிகளையோ சலுகைகளையோ கோரியதில்லை என்றும், தனது மக்களின் உரிமைகளுக்காகவே குரல் கொடுத்தவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் மறைந்த எம்.கே.சிவாஜிலிங்கத்தின் உடலுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியிருந்தார்.

உடல்நலக் குறைவு காரணமாக சனிக்கிழமை (14) நள்ளிரவு காலமான சிவாஜிலிங்கத்தின் இறுதிக்கிரியைகள் வல்வெட்டித்துறை, நெடியகாடு, கல்றோட் வீதியிலுள்ள அவரது இல்லத்தில் இன்று (16) காலை நடைபெற்றன.

அதனைத் தொடர்ந்து அன்னாரின் பூதவுடல் வீட்டிலிருந்து எடுத்துச்செல்லப்பட்டு வல்வெட்டித்துறை சந்தியில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில் பெருந்திரளானோர் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

அஞ்சலி நிகழ்வில் முன்னாள் மற்றும் இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், கட்சிப் பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டுள்ளனர்.

அஞ்சலி நிகழ்வுகளின் பின்னர் பூதவுடல் வல்வெட்டித்துறை ஊறணி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டிருந்தது.


No comments