சாட்டியில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிச்சயம்!
யாழ்ப்பாணம், சாட்டி மாவீரர் துயிலுமில்ல பகுதியில் மாவீரர் நாள் நிகழ்வுகளை முன்னெடுப்பதற்கான ஆரம்ப ஏற்பாட்டுப் பணிகள் நேற்றைய தினம் புதன்கிழமை (நவம்பர் 18) மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வேலணை பிரதேச சபை தவிசாளர் மற்றும் உப தவிசாளர் உள்ளிட்டவர்களின் பங்கேற்புடன் ஏற்பாட்டுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.எத்தகைய தடைகள் ஏற்படுத்தப்பட்டாலும், சாட்டியில் வழமை போன்று இம்முறையும் உணர்வெழுச்சியுடன் மாழூவீரர் நாள் அனுஸ்டிப்பு முன்னெடுக்கப்படும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நினைவேந்தல்; தொடர்பான வழக்கு விசாரணைகள் நாளைய தினம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 20) நடைபெறவுள்ள நிலையில், நீதிமன்றக் கட்டளை தமக்குச் சாதகமாக அமைந்தால் துயிலுமில்லம் அமைந்துள்ள காணியிலேயே மாவீரர் நாள் நிகழ்வுகள் முன்னெடுக்கப்படும் என ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.
ஒருவேளை கட்டளை தமக்கு எதிராகக் கிடைக்கப்பெற்றால் துயிலுமில்லத்திற்கு முன்பாக உள்ள வேலணை பிரதேச சபைக்குச் சொந்தமான காணிக்குள் நிகழ்வுகள் முன்னெடுக்கப்படும் எனவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சாட்டி மாவீரர் துயிலுமில்லம் அமைந்துள்ள காணிக்குத் தனிநபர் ஒருவர் உரிமை கோரியுள்ளதுடன், தமது காணியில் மாவீரர் நாள் நிகழ்வுகளை முன்னெடுக்கக் கூடாது எனவும், அதற்குத் தடை விதிக்க வேண்டும் எனவும் ஊர்காவற்துறை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து காவற்துறையினரால் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment