ஈபிடிபி எண்மருக்கு மரணதண்டனை!
வடகிழக்கு தமிழர் தாயகத்தினில் ஈபிடிபி அமைப்பினால் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட படுகொலைகளிற்கான நீதி குடும்பங்களிற்கு கிட்டத்தொடங்கியுள்ளது.
ஏறாவூர் பகுதியைச் சேர்ந்த தேவதாஸ் சுரேஸ்குமார் என்பவரைக் கடந்த 2008ஆம் ஆண்டு வானில் கடத்திச் சென்று கொலை செய்த சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட 9 பேரில், 8 பேருக்கும் இன்று வியாழக்கிழமை (19) மரண தண்டனை விதித்து நீதிமன்று தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2008ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19ஆம் திகதி, தேவதாஸ் சுரேஸ்குமார் என்பவரை அப்போதைய செங்கலடி முகாமில் இருந்த ஈ.பி.டி.பி. உறுப்பினர்கள் வானில் கடத்திச் சென்று, கொலை செய்து புதைத்துள்ளனர்.அத்துடன் புதைகுழி மீது வாழைமரத்தை நட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
வழக்கு 2016ஆம் ஆண்டு மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வானும் மீட்கப்பட்ட நிலையில், வழக்கு விசாரணை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டது.
முடிவில் ஈபிடிபி உறுப்பினர் 8 பேரும் குற்றவாளிகளாக நீதிமன்றில் இனங்காணப்பட்டுத் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, தண்டனை விதிக்கப்பட்ட 8 பேரும் உடனடியாக நீதிமன்றத்திலிருந்து மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment