இலங்கையில் புதிதாக முளைக்கும் சிறைகள்!
இலங்கையில் சிறைகளில் ஏற்பட்டுள்ள இடநெருக்கடியையடுத்து பழைய போகம்பரை சிறைச்சாலையை மீண்டும் ஒரு சிறைச்சாலையாக ஸ்தாபிப்பதாக நீதியமைச்சர் விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவித்துள்ளார்.
சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் பிரிவின் கீழ் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, அவர் அத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் என்ற ரீதியில் உத்தரவைப் பிறப்பித்துள்ள அமைச்சர் அதற்கான வர்த்தமானி அறிவித்தலை நேற்று வெளியிட்டுள்ளார்.
வர்த்தமானி அறிவித்தலின்படி, பழைய போகம்பரை சிறைச்சாலையின் அதிகார வரம்பு முழு இலங்கையையும் உள்ளடக்கியதாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கை அதன் கொள்ளளவை விட அதிகமாக உள்ளது.
அண்மையில், நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறை சம்பவத்தை தொடர்ந்தும், விடயம் அதிக கவனத்தை பெற்றுள்ளது.
பழைய போகம்பரை சிறைச்சாலையானது முன்னதாக அருங்காட்சியகம் அல்லது சுற்றுலாத் தளமாக மாற்றும் திட்டங்களில் இருந்தபோதும், தற்போது நாட்டின் சிறைச்சாலைத் தேவைக்கேற்ப அது மீண்டும் முழுமையான சிறைச்சாலையாக வர்த்தமானி மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, முன்னதாக காலி, மஹமோதரவில் புதிய சிறைச்சாலை ஒன்றை நிறுவுவதற்காக நீதி அமைச்சர் ஹர்சன நணயக்கார விசேட வர்த்தமானி அறிவித்தலொன்றை வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment