பிள்ளையானின் கூலிப்படை இரண்டாயிரம்?
பிள்ளையன் குழுவுடன் தொடர்புடைய இரண்டாயிரத்திற்கும் மேற்படடவர்களிற்கு விடுதலைப்புலிகளிற்கெதிரான நடவடிக்கைகளிற்கு இராணுவ உளவுத்துறை மூலம் பணம் வழங்கப்பட்டுவந்தமை அம்பலமாகியுள்ளது. அந்தப் பணம் தேசியப் பாதுகாப்பு நோக்கங்களுக்காக அல்லாமல், அரசியல் உள்நோக்கம் கொண்ட நடவடிக்கைகளுக்காக பின்னர் வழங்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில் பெறப்பட்ட ஆதாரங்களின்படி, சிவனேசத்துரை சந்திரகாந்தனுடன் தொடர்புடைய ஒரு குழுவிற்கும் இராணுவப் புலனாய்வுத் துறையின் சில பிரிவுகளுக்கும் இடையே தொடர்பு உள்ளது என்பது நீதிமன்றில் அம்பலமாகியுள்ளது.
சட்டபூர்வமான அரச பாதுகாப்பு நடவடிக்கைகளுக்குப் பதிலாக, அரசியல் படுகொலைகளுக்கும் அரசியல் எதிரிகளுக்கு எதிரான பழிவாங்கலுக்கும் இந்தத் தொடர்பு பயன்படுத்தப்பட்டதாக சுட்டிக்காட்;டப்பட்டுள்ளது.
பத்திரிகையாளர் பிரகீத் எக்னலிகொடவின் கடத்தல், பத்திரிகையாளர்கள் கீத் நோயர் மற்றும் உபாலி தென்னக்கூன் மீதான தாக்குதல், மற்றும் லசந்த விக்ரமசிங்கவின் கொலை ஆகியவை இவற்றில் அடங்குமென கூறப்படுகின்றது.
இதனிடையே ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புகளுக்கு முன்னர், வடக்கு மாகாணத்தில் இராணுவத்துடன் தொடர்புடைய ஒரு குழுவைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தவோ அல்லது தெற்கில் தாக்குதல் நடத்தவோ ஆரம்பத் திட்டங்கள் தீட்டப்பட்டதாகவும், ஆனால் பின்னர் அவை கைவிடப்பட்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Post a Comment