செம்மணி:சித்திரவதைகளின் பின்னரான படுகொலையா?



செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 42-ஆவது நாளான இன்றைய தினம் வெள்ளிக்கிழமை, சித்திரவதைகளின் மூலம் படுகொலை செய்யப்பட்டதாக நம்பப்படும் என்புக்கூடொன்று மீட்கப்பட்டுள்ளது.

என்புக் கூட்டின் வலது பக்க விலா எலும்புடன் பாய்ந்த நிலையில் இரும்புத் தகடு மற்றும் ஆணிகள் சான்றுப் பொருட்களாக மீட்கப்பட்டுள்ளது.

அதேவேளை மேலுமொரு  மனித என்புக் கூடும் என்புக் கூட்டுச் குவியலும் உத்தியோகபூர்வமாக இன்று அடையாளம் காணப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தின் நேரடி உத்தியோகபூர்வ மேற்பார்வையில், சட்ட மருத்துவ அதிகாரிகள் மற்றும் தடயவியல் நிபுணர்களின் பங்களிப்புடன் அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், இன்றைய தினத்துடன் அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக நிறைவுறுத்தப்பட்டு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 04ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.

நீதிமன்றத்தினால் 56 நாட்களுக்குத் தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள இம் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியின் இன்றைய 42-ஆவது நாளில் இதுவரையான அகழ்வுகளின் போது புதைகுழிப் பரப்பிற்குள் இருந்து இதுவரை மொத்தம் 480 மனித எண்புக் கூடுகள் உத்தியோகபூர்வமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

அடையாளம் காணப்பட்டவற்றுள் மொத்தம் 479 மனித எண்புக் கூடுகள் மண்ணிலிருந்து முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டு, மேலதிக அறிவியல் மற்றும் மரபணு சோதனைகளுக்காக நீதிமன்றப் பாதுகாப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளன.


No comments