ஈரானின் அச்சுறுத்தலை போப் புரிந்துகொள்ள வேண்டும் - டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், போப் லியோ XIV-ஐ தொடர்ந்து கடுமையாகச் சாடி, உலகப் பிரச்சினைகள் குறித்து லியோ என்ன வேண்டுமானாலும் கூறலாம். ஆனால் போப்பாண்டவர் ஒரு மோசமான உலகின் யதார்த்தங்களைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று செய்தியாளர்களிடம் கூறினார்.
ஈரான் உலகிற்கு ஓர் அச்சுறுத்தல் என்பதை போப் லியோ புரிந்துகொள்வது மிகவும் முக்கியம் என்று அமெரிக்க ஜனாதிபதி கூறினார்.
உலகின் 140 கோடி கத்தோலிக்கர்களின் தலைவருடனான டிரம்பின் பகை, ஈரான் போர் முதல் குடியேற்றக் கொள்கை வரையிலான பல்வேறு தலைப்புகளில் நீள்கிறது.
சமீபத்திய நாட்களில் போப் பலவீனமானவர் மற்றும் தவறானவர் என்று டிரம்ப் குற்றம் சாட்டியுள்ள நிலையில், அமெரிக்க அதிபர், லியோவுடன் தனக்கு சண்டை இல்லை என்றும், அவருக்கு எதிராக தனக்கு எதுவும் இல்லை என்றும் மறுத்துள்ளார்.
கடந்த சில மாதங்களில் ஈரான் 42,000-க்கும் மேற்பட்டோரைக் கொன்றிருக்கிறது என்பதை போப் புரிந்துகொள்ள வேண்டும் என்று அதிபர் கூறினார். அவர்கள் முற்றிலும் நிராயுதபாணியான போராட்டக்காரர்கள். போப் இதை புரிந்துகொள்ள வேண்டும். இதுதான் நிஜ உலகம், இது ஒரு மோசமான உலகம் என்றார்.
ஜனாதிபதியின் விமர்சனத்திற்கு பதிலளித்த போப் லியோ, தனது கருத்துக்களில் உறுதியாக நிற்பதாகவும், போருக்கு எதிராகக் குரல் கொடுப்பது தனது தார்மீகக் கடமை என்றும் கூறியுள்ளார். ஈரானிய நாகரிகத்தின் மீது தாக்குதல் நடத்துவதாக டிரம்ப் விடுத்த அச்சுறுத்தலை அவர் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் கூறியுள்ளார்.
போப் அவர் விரும்பியதைச் சொல்லலாம். அவர் விரும்பியதைச் சொல்ல வேண்டும் என்று நானும் விரும்புகிறேன். ஆனால் நான் அதனுடன் முரண்படலாம் என்று டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறினார்.

Post a Comment