அணு ஆயுதத் திட்டங்களைக் கைவிட ஈரான் ஒப்புக்கொண்டதாக டிரம்ப் கூறுகிறார்
ஈரான் தனது செறிவூட்டப்பட்ட யுரேனியக் கையிருப்பை ஒப்படைக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும், இரு தரப்புக்கும் இடையிலான அமைதி ஒப்பந்தம் நெருங்கிவிட்டது என்றும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அணுத் தூசியை எங்களிடம் திருப்பித் தர அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர் என்று டிரம்ப் கூறினார். அணு ஆயுதங்களைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படலாம் என்று அமெரிக்கா கூறும் செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பை அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.
அடுத்த 20 ஆண்டுகளுக்கு அவர்களிடம் அணு ஆயுதங்கள் இருக்காது என்று எங்களிடம் ஒரு மிக வலிமையான அறிக்கை உள்ளது என்று அவர் மேலும் கூறினார்.
போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு சாத்தியமான உடன்பாடு ஏற்படும் என்ற பெரும் நம்பிக்கையுடன், போர் நிறுத்தத்தை நீட்டிக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போகலாம் என்றும் அமெரிக்க அதிபர் சூசகமாகத் தெரிவித்தார்.
இதை நீட்டிக்க வேண்டிய அவசியம் இருப்பதாக எனக்கு உறுதியாகத் தெரியவில்லை என்று டிரம்ப் கூறினார். ஈரான் ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ள விரும்புகிறது நாங்களும் அவர்களுடன் மிகவும் சுமுகமாகப் பழகி வருகிறோம்.
நாம் ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கு மிக நல்ல வாய்ப்பு உள்ளது என்று கூறிய அவர் அமெரிக்கா கோரிய ஏறக்குறைய அனைத்திற்கும் ஈரான் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான அடுத்த சந்திப்பு வார இறுதியில் நடைபெறலாம் என்றும், இஸ்லாமாபாத்தில் ஈரான் உடனான ஒப்பந்தம் எட்டப்பட்டு கையெழுத்திடப்பட்டால், தான் நேரில் அங்கு செல்லக்கூடும் என்றும் டிரம்ப் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Post a Comment