நிலவுக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தை நிறைவுசெய்த ஆர்டெமிஸ் குழுவினர்


நாசாவின் ஆர்டெமிஸ் II திட்டத்தில் நிலவைச் சுற்றி வந்த நான்கு விண்வெளி வீரர்கள், எந்தக் குறையுமின்றி பூமிக்குத் திரும்பிய பின்னர், பசிபிக் பெருங்கடலில் பாதுகாப்பாகத் தரையிறங்கினர்.

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி கழகம் (நாசா), நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் பணியை ஆர்டெமிஸ்-2 திட்டத்தின் கீழ் மீண்டும் தொடங்கியது. இதில் கடந்த 2ஆம் திகதி ஒரியன் விண்கலத்தில் ஒரு பெண் உள்பட 4 விண்வெளி வீரர்களை அனுப்பியது. இவர்கள் நிலவை சுற்றி ஆய்வு செய்தனர். மேலும் நிலவின் மறுபக்கத்தை நேரில் பார்த்தவர்கள் என்ற சாதனையையும் படைத்தனர்.

ஆய்வுகளை முடித்து கொண்டு ஒரியன் விண்கலத்தில் 4 விண்வெளி வீரர்களும் பூமியை நோக்கி புறப்பட்டனர். அவர்கள் பயணித்த ஒரியன் விண்கலம் இன்று காலை 5.37 மணியளவில் பூமிக்கு வந்தடைந்தது. நிலவை ஆராய்ந்த 4 விண்வெளி வீரர்களும், 3 பாராசூட் உதவியுடன், அமெரிக்காவின் சான் டீகோ நகர் அருகே பசிபிக் கடலில் வந்திறங்கினர்.

பூமியில் இருந்து 4 லட்சத்து 6 ஆயிரத்து 770 கி.மீ. தொலைவிலுள்ள பகுதியை இந்த ஒரியன் விண்கலம் சென்றடைந்து விட்டு, பூமிக்கு திரும்பியுள்ளது. மொத்தம் 11 லட்சத்து 2 ஆயிரத்து 398 கி.மீ. தொலைவுக்கு விண்கலம் பயணித்து உள்ளது. அப்போலோ 13-ன் 2 லட்சத்து 48 ஆயிரத்து 655 மைல் பயணம் என்ற சாதனையை இது முறியடித்து உள்ளது.

இதனை தொடர்ந்து, ஒரியன் விண்கலத்தில் இருந்த வீரர்கள் 4 பேரும் மீட்கப்பட்டு அமெரிக்காவின் யு.எஸ்.எஸ். ஜான் பி. மூர்த்தா என்ற போக்குவரத்து கப்பலுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதன்பின்பு அவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட உள்ளன.

இதற்காக விண்வெளி வீரர்கள் 4 பேரும் ஒரியன் விண்கலத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியே கொண்டு வரப்பட்டனர். பின்பு, ஹெலிகாப்டர் ஒன்றில் ஏற்றப்பட்டு, அவர்கள் கப்பலுக்கு கொண்டு வரப்பட்டனர். இது தொடர்பான வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டு உள்ளது.

No comments