யேர்மனியில் எல்லைச் சோதனைகள் அமுலுக்கு வருகின்றன!
யேர்மனியைச் சுற்றியுள்ள அனைத்து நாடுகளின் எல்லைப் பகுதிகளில் எல்லைக் காவல்துறையினர் சோதனைகளை இன்று திங்கட்கிழமை முதல் தொடங்கியுள்ளது.
யேர்மனியில் சமீபத்திய தீவிரவாத தாக்குதல்கள், எல்லை கடக்கும் பயணிகள், ஏதிலிகளின் இடம்பெயர்வுகள், கடத்தல்கள் போன்ற குற்றங்களை ஒடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக யேர்மன் காவல்துறையினர் நாட்டின் அனைத்து நில எல்லைகளையும் கண்காணிக்கத் தொடங்கியுள்ளனர்.
முன்னர் யேர்மனியின் கிழக்கு மற்றும் தெற்கு நில எல்லைகளுக்கு வரும் பயணிகள் மட்டுமே சோதனை செய்யப்பட்டனர். இப்போது குறைந்தது அடுத்த ஆறு மாதங்களுக்கு, வடக்கு மற்றும் மேற்கு எல்லைகளும் கண்காணிக்கப்படவுள்ளது.
இதில் டென்மார்க், நெதர்லாந்து, பெல்ஜியம், லக்சம்பர்க் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுடனான எல்லைக் கடப்புகளும் அடங்கும்.
யேர்மனி ஷெங்கன் பகுதியின் மையத்தில் உள்ளது. இதில் 29 ஐரோப்பிய நாடுகள் உள் எல்லைக் கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளன. கடவுச்சீட்டுகள் வெளிப்புற எல்லைகள் மற்றும் விமான நிலையங்களில் மட்டுமே தேவைப்படுகிறது.
Post a Comment