முத்துக்குமார் நினைவேந்தல் இன்று!
ஈழத்தமிழர்களின் படுகொலைக்கு இந்திய அரசு துணை போவதாக, கண்டித்து தனக்குத்தானே தீயிட்டு உயிரைப் போக்கிக்கொண்ட முத்துக்குமாரின் நினைவேந்தல் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பத்திரிகையாளராக வேலை செய்து வந்தவர். அதற்கு முன்னர் உதவி இயக்குநர் ஆகவும் வேலை செய்தவர்.
தமிழ்நாடு, தூத்துக்குடி மாவட்டம், புலியநல்லூரைச் சேர்ந்த முத்துக்குமரன் (28) எனும் இளைஞர் சென்னை நுங்கம்பாக்கத்தில் மத்திய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள சாஸ்திரி பவனுக்கு 2009ம் ஆண்டில் ஜனவரி 29 அன்று காலை வந்து திடீரென, ஈழத்தமிழர்களை வாழ்த்தி முழக்கமிட்டும், அவர்களைக் காப்பாற்ற கோரியும் சத்தமிட்டபடி மண்ணெண்ணெயை உடலில் ஊற்றித் தீயை பற்ற வைத்தார். அவர் கையிலிருந்த ஈழத்தமிழரின் போராட்டத்திற்கன பிரசுரங்கள் காற்றில் பறந்தன. உடல் முழுவதும் தீ எரிந்த நிலையில் முத்துக்குமரன் ஓர் இடத்தில் சாய்ந்து விழுந்தார். அவர்மீது எரிந்து கொண்டிருந்த தீ அணைக்கப்பட்டு உடனடியாக அவரைக் காவல்துறையினர் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பயனின்றி இறந்தார்.
இறக்கு முன்பு முத்துக்குமார் காவற்துறையினரிடம் அளித்த மரண வாக்குமூலத்தில், "இலங்கையில் தமிழ் இனம் சிறக்க வேண்டும். காங்கிரஸ் ஆட்சியில் மத்திய அரசு இலங்கை பிரச்சினையில் குருடு ஆகிவிட்டது. அதன் கண்களைத் திறப்பதற்காவே எனது உடலில் தீ வைத்துக் கொண்டேன். வேறு எங்கும் தீக்குளித்தால் சாதாரணமாக விட்டு விடுவார்கள். எனவே தான் ஒன்றிய அரசு அலுவலகத்துக்குள் சென்று தீக்குளித்தேன். இலங்கை தமிழர்களைக் காப்பாற்ற தமிழ்நாட்டில் பெரிய அலை கிளம்பி உள்ளது. எனினும் ஒன்றிய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஈழத் தமிழர்களில் நிறைய புத்திசாலிகள் இருக்கின்றனர். அவர்கள் பலியாவது வேதனையாக இருக்கிறது." என்று குறிப்பிட்டார்
Post a Comment