பிள்ளையானிடம் புதையல் இருக்கிறது! கல்குடா பேத்தாளை எல்லையிலுள்ள ஒரு தென்னந்தோப்பு, களுவாஞ்சிக்குடி கடற்கரையில் உள்ள மதுபானசாலை வளாகம், நாவலடியிலுள்ள கறுவாத் தோட்டம் போன்றனவற்றில் பெருமளவிலான ஆயுதங்களை பிள்ளையான் குழு புதைத்து வைத்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

2009.03.07 அன்று ரீ.எம்.வி.பி. என்ற 'பிள்ளையான் ஆயுதக் குழு' தங்கள் வசமிருந்த ஏராளமான ஆயுதங்களை இலங்கை இராணுவத்தினரிடம் பகிரங்கமாகக் கையளித்திருந்தது.

மட்டக்களப்பு வெபர் அரங்கில் இடம்பெற்ற அந்த ஆயுதக் கையளிப்பு நிகழ்வில் நூறுக்கும் மேற்பட்ட இயந்திரத் துப்பாக்கிகள், ரொக்கட் லோஞ்சர்கள், கைத்துப்பாக்கிகள், தோட்டாக்கள் என்று ஏராளமான ஆயுதங்களை அவர்கள் கையளித்திருந்தார்கள்.

பிரிகேடியர் பர்ணாண்டோ மற்றும் டி.ஜ.ஜி எடிஷன் குணதிலக்கவிடம் ஆயுதங்கள் கையளிக்கப்பட்டன. தமது உறுப்பினர்கள் அரசியல் நீரோட்டத்தில் கலக்க இருப்பதாகவும், பலர் வெளிநாடுசென்று பணிபுரிய உள்ளதாகவும் அந்த அமைப்பின் பேச்சாளர் அசாத் மௌலானா அறிவித்திருந்தார்.

ஆனால், சிறிலங்கா அரசபடைகளிடம் ஒப்படைக்காமல் ஏராளமான ஆயுதங்களை பிள்ளையான் குழு இரகசியமாக புதைத்துவைத்துள்ளதாக, அந்த அமைப்பில் நீண்டகாலம் செயற்பட்ட அந்த முக்கியஸ்தர் எமது செய்தியாளரிடம் தெரிவித்திருந்தார்.

திருக்கோவில் பிரதேசத்தில் சீலன் என்பவருடைய காணியிலும், ருத்திரா மாஸ்டர் என்பவருடைய வயலிலும், ஜெயந்தன் என்ற உறுப்பினருடைய தோட்டத்திலும் ஒரு தொகுதி ஆயுதங்கள் புதைக்கப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

No comments