ரஷ்ய எரிபொருள் நிலையத்தில் வெடி விபத்து: 30 பேர்பலி!! 100க்கு மேல் காயம்!!
தெற்கு ரஷ்ய குடியரசின் தாகெஸ்தானில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் ஏற்பட்ட பாரிய வெடிப்பில் 30 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக உள்ளூர் அதிகாரிகள் இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.
இறந்தவர்களில் மூன்று பேர் குழந்தைகள் என்றும் காயமடைந்தவர்களில் 13 சிறுவர்களும் உள்ளடங்குவதாக தாகெஸ்தானின் கவர்னர் செர்ஜி மெலிகோவ் கூறினார்.
பிராந்தியத்தின் தலைநகரான மகச்சலாவின் புறநகரில் திங்கள்கிழமை இரவு வெடிப்பு ஏற்பட்டது. மகிழுந்து பழுதுபார்க்கும் கடையில் தீ விபத்து ஏற்பட்டு, அருகில் உள்ள பெட்ரோல் எரிபொருள் நிலையத்திற்கு பரவி, வெடிவிபத்தை ஏற்படுத்தியதாக ரஷ்ய அரசு செய்தி நிறுவனமான RIA நோவோஸ்டி அந்நாட்டின் அவசரகால அமைச்சகத்தை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது. அதைத் தொடர்ந்து 600 சதுர மீட்டர் பரப்பளவில் தீ கொழுந்துவிட்டு எரிந்தது.
காயமடைந்தவர்களில் சிலர் சிகிச்சைக்காக மாஸ்கோவிற்கு விமானத்தில் கொண்டு செல்லப்படுவார்கள் என்று அறிக்கை கூறுகிறது.
ரஷ்ய அதிகாரிகள் குற்றவியல் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தலா 1 மில்லியன் ரூபிள் (சுமார் $10,000) வழங்கப்படும் என்று தாகெஸ்தானி அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் காயமடைந்தவர்களுக்கு 200,000 - 400,000 ரூபிள் (சுமார் $2,000-$4,000) வழங்கப்படவுள்ளது.
தாகெஸ்தானில் செவ்வாய்கிழமை துக்க நாளாக அறிவிக்கப்பட்டது.
Post a Comment