மேர்வின் சில்வாவிற்கு பயம்!வட-கிழக்கின் அனைத்து பிரதேசங்களிலும் மிக வேகமாக, தினம் தினம் மரபுரிமை ஆக்கிரமிப்புக்கள் நடைபெற்று வருகின்றது.

அதனை எதிர்கொள்ள சரியான பொறிமுறை ஒன்றை, அனைத்து தமிழ் தரப்புக்களும் இணைந்து மேற்கொள்வது அவசியம் என தமிழர் கட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் அமைப்பாளர் தவத்திரு அகத்தியர் அடிகளார், ஊடகங்களுக்கு விடுத்த அறிக்கையில் வடக்கு, கிழக்கு தமிழரின் தலைகளை களனிக்கு கொண்டுவருவேன் என பகிரங்கமாக கூறும் அளவுக்கு வந்துள்ள அரசியல்வாதிகளை கைது செய்வதுடன், தமிழரின் வழிபாட்டுத்தலங்கள் தொடர்பாக மிக மோசமான கருத்துகளை வெளியிடுவோருக்கு எதிராகவும் அரசு உடன் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே தமிழரின் தலையை வெட்டிக் கொண்டு வருவேன் என கொக்கரிக்கும் மேர்வின் சில்வாவுக்கு தலையில் சுகமில்லை என்பது நாடறிந்த விடயமாகுமென மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

உலகத்துக்கு அஹிம்சையை போதித்த போதி சத்துவர் பெயரில் இவர் தமிழர்களின் தலையை வெட்டுவாராம். இவரை போன்றவர்களிடமிருந்து பௌத்தை  போதிசத்துவர்தான் மீண்டும் பிறந்து வந்து காப்பாற்ற  வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.  

நாட்டில், விகாரைகளையோ, கோவில்களையோ, பள்ளிகளையோ, தேவாலயங்களையோ கட்டுவிப்பதில்,  பூஜைகளை செய்வதில் இடைஞ்சல்கள் ஏற்பட்டால்,  அதை சட்டப்படி அணுக வேண்டும். அந்த சட்டமும் அனைவருக்கும் பொதுவாக இருக்க வேண்டும்.

தமிழர் தலைகளை கொய்து வருவேன் என்ற இப்படி தலை வெட்டும் காலம் எல்லாம் இப்போது மலையேறி விட்டது. இவரை பாரதூரமானவராக எடுக்க தேவையில்லை. ஆனால், இவரது கருத்து, பாரதூரமானதெனவும் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.


No comments