குருந்தூர்மலை:குழப்பவாதியை தெரியவில்லையாம்!முல்லைதீவு குருந்தூர்மலையில் குழப்பத்தை தூண்டியவர் குறித்து எந்த வித முறைப்பாடுகளும் இதுவரையில் இல்லாததால் இது தொடர்பில் எவரையும் கைதுசெய்ய முடியாத நிலையில் உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கையில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் குருந்தூர் மலையை அடிப்படையாக வைத்து உருவாகும் குழப்பநிலைக்கு காரணமான நபரை புலனாய்வு பிரிவினர் அடையாளம் கண்டுள்ளனர் என தெரிவித்தார்.

ஆயினும் தற்போது தொடர்பில் எந்த முறைப்பாடும் முன்வைக்கப்படவில்லை. எனவே நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை.

விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு முறைப்பாடுகள் அவசியம், முறைப்பாடுகள் இல்லாமல் விசாரணைகளை முன்னெடுக்கவோ, கைதுசெய்யவோ முடியாதென காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை பகுதியில் தமிழ் மக்களினுடைய பூர்வீக காணிகள் தொல்பொருள் திணைக்களத்தினால் அபகரிக்கப்பட்டுள்ள நிலையில் காணிகள் விடுவிப்பது தொடர்பில்இன்றையதினம் (28) அரசியல் தலைமைகள் மற்றும் அரச அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் விஜயம் செய்து நிலைமைகளை நேரில் அவதானித்திருந்தனர்.

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் இராஜாங்க அமைச்சருமான காதர் மஸ்தான் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சாள்ஸ் நிர்மலநாதன் உள்ளிட்ட பல்வேறு திணைக்களங்கள் துறை சார்ந்த அதிகாரிகள் கிராம மக்கள் சென்று நேரடியாக காணிகளை பார்வையிட்டிருந்தனர்.


No comments