தமிழக கடற்தொழிலாளர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை


இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 09 தமிழக கடற்தொழிலாளர்களுக்கும் ஒன்றரை வருட சிறைத்தண்டனை விதித்த ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று அதனை 5 வருட காலங்களுக்கு ஒத்திவைத்துள்ளது.

நெடுந்தீவு கடற்பரப்பில் கடந்த 25ஆம் திகதி அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்டனர் எனும் குற்றச்சாட்டில் 09 தமிழக கடற்தொழிலாளர்கள். கடற்படையினரால் கைது செய்யப்பட்டு , மறுநாள் கடற்தொழில் நீரியல் வளங்கள் அதிகாரிகள் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை 09 பேரையும் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார். 

இந்நிலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை 09 பேரும் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டதை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளை தொடர்ந்து, இழுவைமடி பயன்பாடு , அனுமதியின்றி தொழிலில் ஈடுபட்டமை மற்றும் இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்தமை ஆகிய மூன்று குற்றச்சாட்டுக்களிலும் 09 பேரையும் குற்றவாளியாக கண்ட நீதிமன்று , தலா 06 மாத சிறைத்தண்டனை வழங்கி, அதனை ஐந்து வருட காலங்களுக்கு ஒத்திவைத்துள்ளது. No comments