யாழில். வீடொன்றில் பணிப்பெண்ணாக இருந்த சிறுமி சடலமாக மீட்பு
சிறுமி பணிப்பெண்ணாக வேலை செய்த வீட்டின் உரிமையாளர்கள் சிறுமிக்கு பல கட்டுப்பாடுகளை விதித்து , சிறுமியை மன ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி வந்ததாக உயிரிழந்த சிறுமியின் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அதேவேளை சிறுமியின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்ட போது , சிறுமியின் முழங்கால்கள் மடிந்து நிலத்தில் முட்டியவாறே காணப்பட்டமையால் , சிறுமியின் உயிரிழப்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் கல்வியங்காட்டு பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து , இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்ட சிறுமி , வட்டுக்கோட்டை முதலி கோவிலடியை சேர்ந்த கேதீஸ்வரன் தர்மிகா (வயது 17), என்றும் அவர் குறித்த வீட்டில் தங்கியிருந்து கடந்த நான்கு மாத காலமாக பணிப்பெண்ணாக வேலை செய்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுமி குடும்ப வறுமை காரணமாக குறித்த வீட்டில் தங்கியிருந்து , பணிப்பெண்ணாக வேலை செய்வதற்காக கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் அந்த வீட்டிற்கு வேலைக்கு வந்துள்ளார்.
வேலைக்கு வந்த சிறுமியை வெளிநபர்கள் வந்து பார்க்க கூடாது எனவும் ,சிறுமியின் வீட்டாருடன் சிறுமி மாதத்தில் ஒரு நாளில் ஒரு சில நிமிடங்கள் மாத்திரமே தொலைபேசியில் உரையாட அனுமதித்துள்ளனர்.
அத்துடன் சிறுமிக்கு அளவுக்கு அதிகமான வேலையையும் கொடுத்துள்ளனர். அதனால் சிறுமி கடுமையான வேலை பளு மற்றும் மன அழுத்தம் என்பவற்றால் பாதிக்கப்பட்டு இருந்தார் என சிறுமியின் உறவினர்கள் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள யாழ்ப்பாண போலிஸார் , சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
Post a Comment