28 ஆண்டுகளாய் மகனின் விடுதலைக்காக போராடிய தாய் இயற்கை எய்தி ஓராண்டு ; மகன் தொடர்ந்தும் சிறையில்


தமிழ் அரசியல் கைதியாக கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது மகனது விடுதலைக்காய் போராடி 77 வயதில் ஏமாற்றத்தோடு இறைபதம் எய்திய விக்னேஸ்வரநாதன் வாகீஸ்வரி அன்னையின் முதலாமாண்டு நினைவேந்தல் இன்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் உள்ள அன்னாரது இல்லத்தில் இன்றைய தினம் புதன்கிழமை மதியம் நினைவஞ்சலி இடம்பெற்றது. 

நிகழ்வில் அவரது பிள்ளைகள் , உறவினர்கள்,  குரலற்றவர்களின் குரல் அமைப்பின் தலைவர் மு. கோமகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அம்மையாரின் திருவுருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து , சுடரேற்றி , மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.  

  திருநெல்வேலியை சேர்ந்த விக்கினேஸ்வரநாதன் பார்த்தீபன் என்பவர், தமிழ் அரசியல் கைதியாக கடந்த 28ஆண்டுகளாக சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். 

தனது மகனது விடுதலைக்காக கடுமையாகப் போராடி வந்திருந்த வாகீஸ்வரி, பிள்ளையின் முகம் காணாமலே கடந்தாண்டு இவ்வுலகை விட்டு பிரிந்திருந்தார்.

சமூக எண்ணங்கொண்டு இம்மண்ணை நேசித்த வாகீஸ்வரி அம்மாவின் ஆத்மா உண்மையிலேயே சாந்தியடைய வேண்டுமானால், 28 ஆண்டுகள் கடந்தும் இன்று வரை சிறைவைக்கப்பட்டுள்ள பார்த்தீபன் உட்பட சக தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்படவேண்டும் என குரலற்றவர்களின் குரல் அமைப்பு கோரியுள்ளது. 









No comments