இலங்கை அரசின் உத்தியோகபூர்வ கஞ்சா முகவர்கள்!

 


கிளிநொச்சி மாவட்டத்தின் பளை காவல்துறையை சேர்ந்த இரு இலங்கை காவல்துறையினர் காணாமல் போயிருந்த நிலையில் கண்டறியப்பட்டுள்ளனர்.அவர்கள் இருவரும் பளை தர்மங்கேணி பகுதியில் கஞ்சா விற்க முயன்றநிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு மதுவரி திணைக்களத்தினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலிற்கு அமைவாக இரு காவல்துறையினரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரு காவல்துறையினரை தொடர்பு கொண்ட தகவலாளர்களான நால்வர் கஞ்சா பொதியினை பெற்றுக்கொள்வதற்காக சென்றுள்ளனர்.

இரு காவல்துறையினரும் கஞ்சா பொதியை விற்பனை செய்ய தயாராக இருந்த போது மதுவரி திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 2 கிலோ 250 கிராம் கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளது.

வடகிழக்கில் கஞ்சா உள்ளிட்ட போதைபொருள் வர்த்தகத்தில் இலங்கை காவல்துறையினரும் முப்படையினரும் தொடர்புபட்டுள்ளதாக சிவில் அமைப்புக்கள் தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டிவருகின்றன.

குறிப்பாக கடற்படையினரின் கண்காணிப்பினை தாண்டி போதைப்பொருட்கள் தென்னிந்தியாவிலிருந்து எவ்வாறு வருகை தருகின்றதென கேள்விகள் எழுப்பப்பட்டுவருகின்றது.

இந்நிலையில் தற்போது கஞ்சா விற்பனையில் காவல்துறையினர் பகிரங்கமாக ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ளமை குற்றச்சாட்டுக்களை உறுதிப்படுத்தியுள்ளது.   


No comments