ஈபிடிபிக்கு தொடர்பில்லையாம்!



அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் வசந்த முதலிகேயின் வருகைக்கு எதிராக ஈபிடிபி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருக்கவில்லையென கட்சி மறுதலித்துள்ளது.

இதனிடையே யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் நிலைப்பாட்டடையும் மக்களையும் சமூகத்தையும் அறிந்திராதவர்களே  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மீது அபகீர்த்தியை ஏற்படுத்துவதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளரான ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் யாழ்ப்பாணத்தில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் என்ற போர்வையில் ஒரு சிறு கூட்டத்தினர் சந்திப்பொன்றை நடத்தியிருந்தனர்.இதன்போது அங்கு சென்ற சிலர் அவர்களை வெளியேறுமாறு கோசமிட்டு குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தனர்.

அவ்வாறு ஆர்ப்பாட்டம் செய்தவர்களை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தரப்பினர் என அடையாளப்படுத்தியிருந்தனர். குற்றம் சாட்டப்பட்ட தரப்பினர் மது போதையில் இருந்ததாகவும் கூறப்பட்ட நிலையில்  அங்கு சென்றவர்களுக்கும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லையென ஈபிடிபி கட்சியின் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை யாழ் பல்கலைக்கழக சமூகமும் குறித்த அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரது சந்திப்பை புறக்கணித்திருந்ததாகவும் குற்றச்ச்சாட்டை முன்வைத்திருந்தவர்கள் தமது தனிப்பட்ட சுயலாபங்களுக்காக எம்மீது சேறுபூசி தம்மை வழிநடத்தும் தரப்பினரை திருப்திப்படுத்த முயற்சித்துள்ளதாகவும் ஈபிடிபி கட்சி தெரிவித்துள்ளது.

முன்னதாக யாழ்.நகரில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் வசந்த முதலிகேயின் கூட்டமொன்றை குழப்பும் வகையில் ஆர்ப்பாட்டமொன்றை அரச ஆதரவாளர்கள் முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments