வடக்கின் போரில் மத்திய கல்லூரி வென்றது!


வடக்கின் போரில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி 09 இலக்குகளால் பெரு வெற்றியீட்டியுள்ளது.

"வடக்கின் போர்" என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரிக்கும்  இடையிலான 116 ஆவது போட்டி யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் கடந்த வியாழக்கிழமை ஆரம்பமானது. 

அதன் போது நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ் பரியோவான் கல்லூரி முதலில் களத்தெடுப்பை தெரிவு செய்தது. 

அதனை அடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி தனது முதல் இன்னிங்ஸில் 66 பந்து பரிமாற்றத்தில் அனைத்து இலக்குகளையும் இழந்து 279 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

துடுப்பாட்டத்தில் மத்திய கல்லூரி சார்பில் அஜே 74 ஓட்டங்களையும், விதுஷன் 71 ஓட்டங்களையும் சன்சஜன் 42 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றிருந்தனர்.

பந்துவீச்சில் யாழ் பரியோவான் கல்லூரி சார்பில் அபிஷேக் 3 இலக்குகளையும் , கஜகர்ணன், விதுஷன் ஆகியோர் தலா 2 இலக்குகளையும் வீழ்த்தியிருந்தனர்.

பதிலுக்கு தனது முதலாம் இனிங்சில் துடுப்பெடுத்தாடிய யாழ்பாணம் பரியோவான் கல்லூரி 51.2 ஓவர்களில் அனைத்து இலக்குகளையும் இழந்து 127 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் யாழ் பரியோவான் கல்லூரி சார்பில் பென்சர் ஜெசியல் 43 ஓட்டங்களையும், சபேசன் 34 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றனர்.

பந்து வீச்சில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி சார்பில் நியூட்டன் -4, கஜன் -3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

153 ஓட்டங்கள் முன்னிலையில் இருந்த மத்தியகல்லூரி பலோ ஒன் முறையில் இரண்டாம் இனிங்சிற்காக முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்பத்தை யாழ் பரியோவான் கல்லூரிக்கு வழங்கியது.

அதன்படி இரண்டாம் இனிங்ஸ்ற்காக துடுப்பெடுத்தாடிய பரியோவான் கல்லூரி 42 ஓவர்கள் முகம்கொடுத்து 7 விக்கெட்டுக்களை இழந்து 137 ஓட்டங்களை பெற்றபோது இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்தது.

துடுப்பாட்டத்தில் யாழ் பரியோவான் கல்லூரி சார்பில் ஜனந்தன் 26 ஓட்டங்களையும், பென்சர் ஜெசியல் 25 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றனர்.

பந்துவீச்சில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி சார்பில் பருதி -4, நியூட்டன் -3, விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இந்நிலையில் மூன்றாம் நாள் ஆட்டம் இன்றைய தினம் சனிக்கிழமை ஆரம்பமான போது 161 ஓட்டங்களுக்கு அனைத்து இலக்குகளையும் பரியோவான் கல்லூரி இழந்தது. 

அதனை அடுத்து 09 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என களம் இறங்கிய மத்திய கல்லூரி அணி ஒரு இலக்கினை இழந்து , வெற்றி இலக்கினை 09 இலக்குகளால் வெற்றி கொண்டது. 

ஆட்டநாயகனாக ரஞ்சித்குமார் நியூட்டனும்,  சிறந்த துடுப்பாட்ட வீரராக நிஷாந்தன் அஜயும், சிறந்த பந்துவீச்சாளராக விக்னேஸ்வரன் பருதியும் தெரிவு செய்யப்பட்டு இருந்தனர் 
No comments