திக்கம் வடிசாலை சிங்களவருக்கு விற்பனை!



திக்கம் வடிசாலையை சுரண்டியதில் பெரும்பங்கை டக்ளஸ் பெற்றிருந்த நிலையில் அதனை தனியார் நிறுவனமொன்றுக்கு தாரைவார்த்து கொடுக்கும் முயற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே அம்முயற்சியை தடுத்து நிறுத்தவேண்டுமென பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரமேஸ் பதிரணவுக்கு அங்கஜன் இராமநாதன் கடிதம் அனுப்பியுள்ளார்.

இக்கடிதத்தில், யாழ்ப்பாண மாவட்டத்தின் மரபுசார்ந்த உற்பத்திக் கைத்தொழில் நிலையங்களில் ஒன்றான திக்கம் வடிசாலையை தனியார் நிறுவனமொன்றுக்கு வழங்குவது தொடர்பாக தங்களுடன் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னதாக தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு உரையாடியிருந்தேன். அதன்போது இவ்விடயம் தொடர்பாக நேரில் சந்தித்து உரையாடுவதற்கு சந்தர்ப்பம் தருவதாக தெரிவித்தபோதிலும் இதுவரை அவ்வாறான சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்படாத நிலையில் எனது ஆதங்கத்தையும் அபிமானத்தையும் இக்கடிதத்தின் ஊடாக தெரியப்படுத்துகிறேன்.

திக்கம் வடிசாலையை முறையற்ற வகையில் தனியார் முதலீட்டாளர்களுக்கு கையளிப்பதன் மூலம் அபிவிருத்தி செய்வதற்கு பனைஅபிவிருத்திச் சபையினால் தீர்மானம் எடுக்கப்பட்டு அதற்குரிய பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை தொடர்பில் தங்கள் கவனத்துக்கு தொடர்ச்சியாக கொண்டுவரப்பட்டுள்ளது.  பனைஅபிவிருத்திச் சபையின் தலைவரால் இதற்கான பூர்வாங்க பணிகள் முழுவீச்சுடன் இடம்பெற்று வரும்நிலையில் இதறகான எதிர்ப்பை திக்கம் வடிசாலை நிர்வாகத்தினர் வெளிப்படுத்தியிருந்தனர். இதனையடுத்து இவ்விடயம் தொடர்பாக முறையான கேள்விமனு கோரப்பட்டு திக்கம் வடிசாலை நிர்வாகத்தினருக்கும் தெரிவு செய்யப்படும் தனியார் நிறுவனத்துக்குமிடையில் உருவாக்கப்படும் விசேட பொறிமுறை ஊடாக திக்கம் வடிசாலை அபிவிருத்தி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், முன்னெடுக்கப்பட்ட கேள்விமனுக் கோரலில் குறிப்பிட்ட ஒரு நிறுவனம் மாத்திரமே கலந்து கொண்டிருந்த நிலையில், கேள்விமனுக் கோரலுக்குரிய தத்துவங்கள் மீறப்பட்டு முறையற்ற வகையில் குறித்த நிறுவனத்துக்கு வடிசாலையை ஒப்படைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் உற்பத்தி பிரிவுக்கான எவ்வித அபிவிருத்திகளும் மேற்கொள்ளப்படாது, வெறுமனே பாதுகாப்பு உத்தியோகத்தர் பிரிவு, அலுவலக நடவடிக்கை பிரிவு ஆகியவற்றுக்கான கட்டிட நிர்மாணம் மட்டுமே இடம்பெற்ற நிலையில் திக்கம் வடிசாலையை தனியாருக்கு முறையற்ற கேள்விமனுக் கோரல் ஊடாக தாரைவார்த்து கொடுக்க  பனைஅபிவிருத்திச் சபையின் தலைவர் தீர்மானித்துள்ளமை முறையற்ற செயலாகும். மக்களது வரிப்பணத்தில் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட இந்த கட்டிட நிர்மாணங்களை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைப்பது பாரிய மோசடியாகும். இது மக்களுக்கு சேரவேண்டிய பொதுச்சொத்தாகும். பனைஅபிவிருத்திச் சபையின் தலைவரது இத்தகைய எதேச்சாதிகாரப் போக்கினால் வடமராட்சி பனைத் தொழிலாளர்களின் வாழ்வுரிமை தட்டிப்பறிக்கப்படும் நிலை காணப்படுகிறது என்பதை சுட்டிக்காட்டுகிறேன். 

தமிழ் மக்களின் இயற்கை வளங்களில் பனை முதன்மையானது. இதிலிருந்து அதியுச்சப் பயனை பொருளாதார ரீதியாக பெற வேண்டும் என்ற நோக்குடன் பனை அபிவிருத்திச் சபை உருவாக்கப்பட்டது . அத்தகைய பொறுப்புவாய்ந்த சபையானது தனிநபரின் நோக்கங்களுக்கு கட்டுப்பட்டு, பனையை நம்பிய வாழ்வாதார பயனாளிகளை துன்புறுத்தும் செயலில் ஈடுபடுவதை நான் கண்டிக்கிறேன். 

திக்கம் வடிசாலையானது 1983 ஆம் ஆண்டு அப்போதைய பாராளுமன்ற உறுப்பினர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலும், பனை, தென்னைவள அபிவிருத்திக்கூட்டுறவுச் சங்கங்களின் கூட்டு நிதியிலும் உருவாக்கப்பட்டதாகும். ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து மிகவும் இலாபத்தோடு இயங்கிவந்த இந்த வடிசாலையானது உள்நாட்டு யுத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பனை அபிவிருத்திச் சபையிடம் பெறப்பட்ட உதவியோடு வடிசாலை தனது பணிகளை தொடந்த நிலையில், 2001ஆம் ஆண்டு அமைச்சரவைப் பத்திரத்தின் மூலம் பனை அபிவிருத்திச் சபையின்கீழ் கொண்டு வரப்பட்டிருந்தது. அப்போதிலிருந்தே திக்கம் வடிசாலையின் சுயாதீன தன்மைக்காக வடமராட்சி பனைசார் உற்பத்தித் தொழிலாளர்கள் போராடி வருகிறார்கள்.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள பனை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கங்களில் சுமார் 7,500 உறுப்பினர்கள் கள் இறக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் 

திக்கம் வடிசாலையானது முறையாக இயங்கும்பட்சத்தில், 3 தொடக்கம் 4 மில்லியன் ரூபாய் வருமானம் பெறக்கூடியதாக அமையும். இந்த வருமானமானது திக்கம் வடிசாலைக்கும், அதனை நம்பியுள்ள தொழிலாளர்களுக்கும் கிடைக்க வேண்டியதாகும். மேலும் 500க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளும் யாழ் மாவட்டத்தில் உருவாக்கப்படும்.

இந்நிலையில், பனைசார் உற்பத்தித் தொழிலாளர்களை மேலும் காயப்படுத்தும் வகையில் இத்தனை பலாபலன்களை தரக்கூடிய திக்கம் வடிசாலையையும் அதன் உரிமத்தையும் தமக்கு வேண்டப்பட்ட தனியார் நிறுவனமொன்றுக்கு வழங்க  பனை அபிவிருத்திச் சபையின் அதிகாரிகளும், பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு மற்றும் கைத்தொழில் அமைச்சு அதிகாரிகளும்  ஆர்வம் காட்டுவதன் பின்னணியில் குறித்த நிறுவனத்தோடு அவர்களுக்கு இருக்கும் தனிப்பட்ட தொடர்புகள் காரணமாக இருக்குமா என்ற சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணத்தின் பனைசார் தொழிலாளர்களின் சொத்தாகிய திக்கம் வடிசாலையானது பறிபோவதை தடுத்து, அதனை பனை உற்பத்தியாளர் சங்கங்களோடு இணைந்த பொறிமுறையூடாக அபிவிருத்தி செய்து மீள இயங்க வைக்கவேண்டியது அவசியமாகும். மக்களின் வாழ்வாதாரத்தோடு தொடர்புடைய இவ்விடயத்தில் குறிப்பிட்ட சிலரின் தேவைகளுக்கேற்ப நடந்துகொள்ள  பனைஅபிவிருத்திச் சபை மற்றும் கைத்தொழில் அமைச்சு என்பன முயலுமாக இருந்தால் மக்களால் முன்னெடுக்கப்படும் போராட்டங்களில் எனது பங்களிப்பையும் வழங்குவேன் என்பதை அறியத்தருகிறேன்.

எனவே, முறையற்ற வகையில் திக்கம் வடிசாலையை தனியாருக்கு தாரைவார்த்துக் கொடுக்க முன்னெடுக்கப்படும் முயற்சிகளை தடுத்துநிறுத்தி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என துறைசார் அமைச்சர் என்றவகையில் தங்களை மக்கள்சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.


No comments