ரஷ்ய அதிபர் புதின் சொல்வதை வெறும் பகடியாகக் கடந்துவிட முடியாது - பிடன்


உக்ரைன் போரில் அணு ஆயுதம் பயன்படுத்தப்போவதாக ரஷ்ய அதிபர் புதின் பேசுவதை வெறும் பகடி என்று கடந்து செல்ல முடியாது என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.

மான்ஹாட்டன் நகரில் ஊடக உலகின் மாபியா என்று அழைக்கப்படும் ரூபர்ட் மர்டாக் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கலந்து கொண்டார். ஜனநாயகக் கட்சிக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சியில் பேசிய பைடன், 1962க்குப் பின்னர் அமெரிக்கா மிகப் பெரிய அணு ஆயுத அச்சுறுத்தலை எதிர்கொள்ளவில்லை. அப்போது கியூபாவில் அணுசக்தி ஏவுகணைகளை நிறுத்தி சோவியத் யூனியன் அச்சுறுத்தியது. உக்ரைன் போரில் அணு ஆயுதங்கள் பயன்படுத்துவேன் என்று ரஷ்ய அதிபர் புதின் சொல்வதை வெறும் பகடியாகக் கடந்துவிட முடியாது என்று கூறினார்.

அண்மையில் புதின் தொலைக்காட்சி உரையின்போது அணு ஆயுதப் போரை நடத்த தயங்க மாட்டோம் என்று எச்சரித்திருந்தார். அவரது எச்சரிக்கை குறித்து சர்வதேச நிபுணர்கள, புதின் சிறிய அளவில் அணு ஆயுதத் தாக்குதலை நடத்தலாம் என்று கூறுகின்றனர். ஆனால் அதன் விளைவுகளும் கூட மிக மோசமானதாகவே இருக்கும் என்று கணிக்கிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். உக்ரைனில் ரஷ்யப் படைகளால் தாக்குப்பிடிக்க முடியவில்லை என்பதால் ஆத்திரத்தில் புதின் அணு ஆயுதம் அல்லது உயிரி ஆயுதம் அல்லது ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தக் கூடிய சாத்தியங்கள் அதிகமாகவே இருக்கும் என்றும் பைடன் எச்சரிக்கிறார்.

கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. தாக்குதல் தொடங்கி 8 மாதங்கள் முடிந்துவிட்ட நிலையில் இன்னும் தீர்வு இல்லாமல் போர் நீண்டு கொண்டிருக்கிறது. அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகம் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கி உதவி வருகிறது. இந்தியா பேச்சுவார்த்தைக்கு திரும்புமாறு உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு வலியுறுத்தி வருகிறது.

No comments