கை கட்சியில் மைத்திரி தனியே!


ஆமை புகுந்த வீடு பாழ் என்பது போல தெற்கில் தற்போது யானை புகுந்த கட்சிகள் நாசமாக தொடங்கியுள்ளன.

அடுத்த அமைச்சரவை மாற்றத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்கவுக்கு அமைச்சரவை அமைச்சுப் பதவி கிடைக்கவுள்ளது.

சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைத்தால் மட்டுமே அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொள்வது என ஸ்ரீலங்கா கட்சி தீர்மானித்திருந்ததுடன், அண்மையில் நடைபெற்ற கட்சியின் வருடாந்த மாநாட்டில் அதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது.

எனினும், அதற்கு இணங்கிய 6 எம்.பி.க்கள், இராஜாங்க அமைச்சர் பதவிகளைப் பெறுவதற்கு அண்மையில் செயற்பட்டனர்.

அதற்கு முன்னர் நிமல் சிறிபால சில்வா மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோர் அமைச்சரவை அமைச்சர்களாக பதவியேற்றனர்.

கட்சியின் தீர்மானத்தின் பிரகாரம் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன, செயலாளர் தயாசிறி ஜயசேகர உள்ளிட்ட சில பாராளுமன்ற உறுப்பினர்களே இன்னும் செயற்பட்டு வருகின்றனர்.

இதேவேளை, மேலும் 12 அமைச்சரவை அமைச்சர்கள் எதிர்காலத்தில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளதாகவும் அந்த 12 பேரில் கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க அமைச்சு பதவி பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவரைத் தவிர ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரேயொரு உறுப்பினர் வஜிர அபேவர்தனவுக்கு அமைச்சரவை பதவி கிடைக்கவுள்ளது.

ஏனைய அனைத்து அமைச்சு பதவிகளையும் பொதுஜன பெரமுனவே வகிக்கும். இதன்படி, அமைச்சுப் பதவிகளை ஏற்காத ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானத்தில் கட்சியின் தலைவரும் செயலாளரும் மாத்திரமே இருக்கும் அதேவேளை, ஏனைய அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவார்கள்.

No comments