யாழில். புதிதாக அமையவுள்ள "தென்மராட்சி கிழக்கு" பிரதேச செயலகம்


யாழ்ப்பாணத்தில் புதிதாக அமையவுள்ள " தென்மராட்சி கிழக்கு" பிரதேச செயலகத்திற்கான காணியை வழங்க நான்கு நன்கொடையாளர்கள் இது வரையில் முன் வந்துள்ளார்கள் எனவும் , காணிகளை வழங்க விரும்புவோர் எதிர்வரும் 31ஆம் திகதிக்குள் அது தொடர்பில் அறிவிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதிக்கு சாவகச்சேரி பிரதேச செயலகத்திற்கு மேலதிகமாக " தென்மராட்சி கிழக்கு" பிரதேச செயலகம் புதிதாக அமையவுள்ளது. 

அதற்கான காணிகளை பெற்றுக்கொள்வது தொடர்பிலான கலந்துரையாடல், தென்மராட்சி பிரதேச செயலர் சந்திரா சத்தியஜோதி தலைமையில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை , சாவகச்சேரி பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது 

அதில் நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் , சாவகச்சேரி பிரதேச சபை தவிசாளர் பொன்னையா குகதாசன் , யாழ் . மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரின் இணைப்பாளரும் , யாழ் . மாநகர சபை உறுப்பினருமான எஸ், கபிலன் , அரச அதிகாரிகள் , பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர். 

அதன் போது , புதிய பிரதேச செயலகத்திற்கு காணிகளை நன்கொடையாக வழங்க இது வரையில் நால்வர் முன் வந்துள்ளனர் எனவும்  , எதிர்வரும் 31ஆம் திகதி க்கு முன்னர் வேறு யாரேனும் காணிகள் வழங்க விரும்பின் தொடர்பு கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டது. 

அடுத்த வருடம் முதல் வார கால பகுதியில் பொருத்தமான காணியினை தெரிவு செய்த பின்னர் , பிரதேச செயலகம் அமைப்பதற்கான அடுத்த கட்ட  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. 

No comments