சீனாவிலிருந்து இறக்குமதியாகும் இந்திய தேசியக்கொடி!

 


கனடாவில் இந்திய சபாநாயகர்கள் பங்கேற்ற ஒரு மாநாட்டில் 'மேட் இன் சீனா' முத்திரையுடனான இந்திய தேசியக்கொடி பயன்படுத்தப்பட்ட நிலையில், இதைக்கூட அரசு இறக்குமதிதான் செய்யுமா என்று தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார் என இந்து தமிழ்திசை நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.

கனடாவின் ஹாலிஃபேக்ஸ் நகரில் நடைபெறும் 65ஆவது காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாடு. இதில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில சட்டப்பேரவை சபாநாயகர்கள், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் கலந்து கொண்டனர்.

அப்போது இந்தியக் குழுவினர் தேசியக் கொடிகளுடன் மாநாட்டுக்கு சென்றனர். அந்தக் கொடியில் 'மேட் இன் சீனா' என முத்திரையிடப்பட்டிருந்ததை கண்டு இந்தியக் குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். இந்த விஷயத்தை மாநில சபாநாயகர்கள், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் கொண்டு சென்றனர். தற்போது இந்த விவகாரம் சர்ச்சையாகியுள்ளது. தேசியக் கொடிகளைக்கூட மத்திய அரசு இறக்குமதி செய்வதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.

இதுகுறித்து மாநாட்டில் கலந்து கொண்ட தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு  நாட்டின் கவுரவத்தை வெளிப்படுத்த தேசியக் கொடிகளுடன் நாங்கள் மாநாட்டுக்கு சென்றோம். ஆனால், அந்தக் கொடிகளில் சீனாவில் தயாரிக்கப்பட்டது என்ற முத்திரை இருந்தது. இதை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கவனத்துக்கு கொண்டு சென்றோம்.

தேசியக் கொடிகளை சீனாவிடமிருந்து இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் சிவகாசி, ஈரோடு, கரூர் மற்றும் நாமக்கல் போன்ற இடங்களில் பல அச்சு ஆலைகள் உள்ளன. இரவு ஆர்டர் கொடுத்தால், மறுநாள் காலை அவர்களால் 100 கோடி தேசியக் கொடிகளை வழங்க முடியும். இதுபோன்ற சூழல் ஏன் ஏற்பட்டது என தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

No comments