அவசர கூட்டம் இன்று மாலை!



அவசரமாக கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன அழைப்பு விடுத்துள்ளார்.  இன்று மாலை ஐந்து மணிக்கு இந்த கூட்டம் ஆரம்பமாகவுள்ளது.

இதனிடையே  கோட்டாபய ராஜபக்ஷ நாட்டிலிருந்து வெளியேறி சென்றதும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சில குழுக்கள் பிரதமர் அலுவலகத்தை கைப்பற்றவும், ஜனாதிபதிக்கு விமானம் வழங்கிய விமானப்படை தளபதி மற்றும் கடற்படை தளபதி ஆகியோரின் வீடுகளுக்குள் நுழைந்து சேதம் விளைவிப்பதற்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததாக புலனாய்வு தகவல் கிடைத்தாக பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

விசேட ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,

 நாடாளுமன்றுக்குள் நுழையவும் இன்று ஆர்ப்பாட்டக்காரர்கள் திட்டமிடப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து சபாநாயகர் உடனடியாக பாதுகாப்பு தரப்பினருடன் கலந்துரையாடலை மேற்கொண்டு நாடாளுமன்றத்திற்கான பாதுகாப்பை பலப்படுத்தினார்.

ஜனாதிபதி திட்டமிட்டவாறு இன்றைய தினம் தமது இராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் கையளிப்பதாக உறுதியளித்துள்ளார். எனவே இனியும் இவ்வாறு வன்முறைகளில் ஈடுபட வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன். எந்தவொரு பிரச்சினைக்கும் வன்முறை தீர்வாகாது.

இந்நிலையில், நாட்டில் இடம்பெற்றுவரும் வன்முறைச் சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்காக பாதுகாப்பு பிரிவினரின் ஆலோசனைக்கு அமைவாக அவசரகால சட்டத்தை அமுல்படுத்தினேன், ஊரடங்கு உத்தரவையும் பிறப்பித்தேன்.

ஒரு ஜனநாயக நாட்டில் ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம் உள்ளிட்டவற்றை ஆர்ப்பாட்டக்காரர்கள் கைப்பற்றி இருப்பதென்பது ஏற்றுக்கொள்ள முடியாததொன்றாகும்.

எவ்வாறாயினும், இவற்றை கைப்பற்றி வழமைக்கு கொண்டுவருவருமாறு பாதுகாப்பு பிரிவினருக்கு அறிவுறுத்தியுள்ளேன். அதற்காக தேவையான பலத்தை பயன்படுத்துமாறும் அறிவுறுத்தியுள்ளளேன். 

எனவே, உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு பாதுகாப்பு பிரிவினர் முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்- என்றார்.

No comments