அடித்துப்பறித்ததே வரலாறு:தராகி சிவராம்! "நாம் இதுவரை பெற்றவை அனைத்தும் அடித்துப் பெறப்பட்டவையே."என்ற மாமனிதர் தராகி சிவராமின் சுலோகத்தை முன்னிறுத்தி படுகொலையான ஊடகவியலாளர்களான தராகி மற்றும் ரஜிவர்மனின் நினைவேந்தல் தமிழர் தாயகமெங்கும் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்த்தேசியம் கண்ட தலைசிறந்த ஊடகப்போராளிகளுள் முதன்மையானவரான படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் டி.சிவராமின் 17 ஆம் நினைவு தினத்தினை முன்னிட்டும் ரஜிவர்மனின் 15வது நினைவு தினத்தை முன்னிட்டும் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை பிரதான நிகழ்வு யாழ்.ஊடக அமைய மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றிருந்தது.

ஊடக அமைய தலைவரும் தினக்குரல் பிரதம ஆசிரியருமான ஆ.சபேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பொதுசுடரை யாழ்.ஊடக அமைய செயலாளர் சிங்காரவேலு நிதர்சன் ஏற்றி வைக்க தராகி சிவராமின் திரு உருவப்படத்திற்கு மூத்த ஊடகவியலாளர்கள் செல்வகுமார் மற்றும் வினோஜித் மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.ஊடகவியலாளர் ரஜிவர்மனின் திரு உருவப்படத்திற்கு யாழ்.ஊடக அமைய பொருளாளரும் தினக்குரல் உதவி ஆசிரியருமான கம்சனன் மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியிருந்தார்.

ஞாபகார்த்த நினைவுரைகளை தராகி சிவராம்,ரஜிவர்மன் ஆகியோரது நெருங்கிய நண்பராக ஊடக செயற்பாட்டாளர் இரட்ணம் தயாபரன் ஆற்றியிருந்தார்.

நூற்றுக்கணக்கிலான ஊடகவியலாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் நிகழ்வில் பங்கெடுத்திருந்தனர்.இதனிடையே மட்டக்களப்பில் நினைவேந்தல் நிகழ்வும் கவன ஈர்ப்பு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டு.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வுகள் நடைபெற்றது. 

இலங்கையில் படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிவேண்டியும் நாட்டில் இடம்பெற்றுவரும் ஊடகவியலாளர்களுக்கு எதிரான அடக்குமுறையினை கண்டித்தும் தமிழ் மக்களின் உரிமையினை அங்கீகரிக்ககோரியும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.


 

அதேவேளை முல்லைதீவிலும் வவுனியாவிலும் ஊடகவியலாளர்கள் ஏற்பாட்டினில் நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டிருந்தது.No comments